Published : 05 Oct 2017 09:27 AM
Last Updated : 05 Oct 2017 09:27 AM
தூத்துக்குடியில் இருந்து நீண்ட இடைவெளிக்கு பின் தென் கொரியாவுக்கு 32,500 டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தென் கொரியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு லட்சக்கணக்கான டன் உப்பு மொத்த சரக்காக (பல்க் கார்கோ) கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டது. அண்மைக் காலமாக உப்பு ஏற்றுமதி படிப்படியாக குறைந்துவிட்டது. சரக்கு பெட்டகங்கள் மூலம் குறைந்த அளவு உப்பு மட்டும் சில நாடுகளுக்கு அவ்வப்போது ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தூத்துக்குடியில் இருந்து தென் கொரியாவுக்கு 32,500 டன் உப்பு கப்பலில் பல்க் கார்கோவாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. எம்.வி.எலினி என்ற கப்பல் மூலம் கடந்த 1-ம் தேதி உப்பு அனுப்பி வைக்கப்பட்டது.
குஜராத் முந்தியது எப்படி?
தென் கொரியாவுக்கு உப்பு ஏற்றுமதி செய்த கே.டி.எம். குழுமத்தின் பங்குதாரர் டி.நாகராஜன் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில் குறைந்த விலையில் உப்பு கிடைப்பதால் பல நாடுகள் அங்கிருந்தே இறக்குமதி செய்கின்றன. மேலும், தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி போன்ற சரக்குகள் பல்க் கார்கோவாக கையாளப்படுவதால் கப்பல் தளங்கள் கரி மற்றும் தூசியாக காணப்படும். இதனால், உப்பு தரம் பாதிக்கப்படும். இந்த காரணங்களால் உப்பு ஏற்றுமதி குஜராத் மாநிலத்துக்கு கைமாறியது. தற்போது, கடும் சவால்களுக்கு இடையே தென்கொரியாவுக்கு உப்பு ஏற்றுமதி செய்துள்ளோம்.
துறைமுகம் உதவி
இதற்கு துறைமுக நிர்வாகம் மிகுந்த உதவி செய்துள்ளது. உப்பு ஏற்றுமதி செய்ய தனியாக கூடுதல் சரக்கு தளத்தை ஒதுக்கி தந்தது. மேலும், உப்பு ஏற்றுமதிக்கான லெவி கட்டணத்தை குறைத்துள்ளது. இதனால்தான், பல்க் கார்கோவாக உப்பு ஏற்றுமதி செய்ய முடிந்தது.
தொடர்ந்து தென் கொரியாவுக்கு உப்பு ஏற்றுமதி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். இதுபோல், வங்கதேசத்துக்கும் ஏற்றுமதி செய்யவுள்ளோம். அங்கிருந்து 3 லட்சம் டன் உப்புக்கு ஆர்டர் வந்துள்ளது. இந்த ஏற்றுமதி மூலம் தூத்துக்குடியில் உப்புத் தொழில் மேம்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT