Published : 18 Jul 2014 08:46 AM
Last Updated : 18 Jul 2014 08:46 AM

‘தொழிற்சங்க நிலத்தை விற்றதில் முறைகேடு!’: தா.பாண்டியனுக்கு எதிராக குற்றச்சாட்டு

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்கத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வெறும் ரூ.20 லட்சத்துக்கு விற்றதில் முறைகேடு நடந்திருப்பதாக தா.பாண்டியன் மீது புகார் கிளம்பியுள்ளது.

திருச்சி மாநகரில் ‘சவுத் மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி ஒர்க்கர்ஸ் யூனியன்’செயல்பட்டு வந்தது. 1973-ல் இந்த சங்கம் கலைக்கப்பட்டது.

இந்நிலையில், சங்கத்துக்கு சொந்தமான 5000 சதுர அடி அளவுள்ள இடம், கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி ரூ.20 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

சங்கம் கலைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் தற்காலிகச் செயலாளரான தனக்கு முன்னாள் செயலாளர் பவர் கொடுத்திருந்ததாகச் சொல்லி இந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன். கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளர் இந்திரஜித் சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார்.

பல கோடி மதிப்புள்ள இடத்தை வெறும் ரூ.20 லட்சத்துக்கு விற்றதன் பின்னணியில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கட்சிக்குள் புகார் எழுந்தது.

இதுகுறித்த விவரங்கள் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, கட்சி அளவில் நடத்தப்பட்ட விசார ணையின் ஒரு நடவடிக்கையாக தா.பாண்டியன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

விசாரணையின் இறுதியில் முறைகேடு நடந்தது உண்மைதான் என்றும், தா.பாண்டியன் உள்ளிட்டோர் மீது கட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று விசாரணைக்குழு கருத்துத் தெரிவித்ததாகவும் சொல்லப் படுகிறது.

இதற்கிடையே, சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தை இடித்துவிட்டு புதிதாக ஏழு மாடி கட்டிடம் கட்டியதிலும் முறையான கணக்கு வழக்குகள் சமர்ப்பிக்கவில்லை என்று புகார் வெடித்திருக்கிறது. கட்சி அலுவலகம் கட்டும் பொறுப்பை தா.பாண்டியனே கவனித்து வந்தார் என்பதால் இந்தக் குற்றச்சாட்டும் அவரை மையப்படுத்தியே சுழல்கிறது.

இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் பேசிய மூத்த கம்யூனிஸ்ட் தோழர்கள் கூறியதாவது:

பழைய கட்டிடத்தை இடிப்பதற்கு முன் கட்சியின் மாநிலக் குழுவில் முறையாக அனுமதி பெறப்படவில்லை. புதிய கட்டிடம் கட்ட வெளிப் படையாக எந்தவொரு டெண்டரும் கோரப்படவில்லை. கட்சி அலுவலகம் கட்டுவதற்கு பல வழிகளிலும் நிதி திரட்டப்பட்டிருக்கிறது. சிலரிடம் கட்டுமானப் பொருட்களாகவும் பெறப்பட்டுள்ளது. ஆனால், எதற்குமே இதுவரை முறையான கணக்குகள் சமர்ப்பிக்கவில்லை.

நன்கொடை நிதிகளும் கட்சிக்கென உள்ள வங்கிக் கணக்கில் முழுமையாக வந்து சேரவில்லை. இதுகுறித்து கேள்வி எழுப்பினால் தனக்கு அனைத்து அதிகாரங்களும் இருப்பதாகச் சொல்கிறார்.

தா.பாண்டியன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி வரை புகார் செய்யப்பட்டுள்ளது. எனினும் ஏன் தா.பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

‘விசாரணை அல்ல.. விவாதம்..’

தா.பாண்டியன் மீதான புகார்கள் குறித்து கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

நிலம் விற்கப்பட்டது தொடர்பாக விசாரணை எதுவும் நடக்கவில்லை. மாநில நிர்வாகிகள் விவாதம் மட்டுமே செய்து வருகின்றனர். அது இன்னும் முடியவில்லை. பொதுவாக அதிக பயனில்லாத நிலங்களை கட்சி விற்பதுண்டு. கட்சியின் சொத்துக்களை விற்க தனி நபர் யாருக்கும் அதிகாரம் இல்லை. முக்கியப் பொறுப்பாளர்கள் அனுமதியுடன் விற்கலாம். திருச்சி நிலத்தை கூடுதல் விலைக்கு விற்றிருக்கலாம் என சில தோழர்கள் கருதுகின்றனர். மக்களவைத் தேர்தல் காரணமாக இதுபற்றி உடனடியாக விவாதிக்கப்படவில்லை.

சென்னையில் கட்சி அலுவலகம் கட்டியது தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் வழக்கமானதுதான். கட்சியின் கணக்குகளை ஆடிட் குழுக்கள் பார்த்த பிறகு மாநில நிர்வாகக் குழு சரிபார்க்கும். தற்போது, மாநிலங்களின் கணக்கு வழக்குகளை ஒவ்வொரு வருடமும் தேசிய நிர்வாகக் குழுவும் சரிபார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டே எடுக்கப்பட்ட முடிவே தவிர, பாண்டியன் மீதான புகாருக்காக எடுக்கப்பட்டதல்ல. புதிய கட்டிடம் கட்ட வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது. அதற்கான கணக்கை இன்னும் ஒப்படைக்காத நிலையில், தவறு நடந்திருப்பதாக எப்படி கூற முடியும்?

இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.

- ஆர்.ஷபிமுன்னா

‘புகாரை நிராகரித்துவிட்டது தலைமை..’

சத்தியமங்கலத்தில் நடந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த தா.பாண்டியனிடம் இந்தப் புகார்கள் குறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

திருச்சி நிலம் சவுத் மெட்ராஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சங்கத்தால் வாங்கப்பட்டது. அந்த நிலம் காலியாக கிடந்ததால், பலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டிக்கொண்டனர். அவர்கள் 40 ஆண்டுகளாக வரி கட்டி, மின் இணைப்பு பெற்று வாழ்ந்து வருகின்றனர். இதில் 12 பேர் முன்பு இருந்த தொழிற்சங்க செயலாளர் ராமசாமியிடம் பத்திரம் பதிந்துள்ளனர். ஆக்கிரமிப்புக்குள்ளான நிலத்தை வாங்க யாரும் தயாராக இல்லை. அங்கிருப்பவர்களை சட்டப்படி காலி செய்து கொள்வதாக ஒருவர் கூறியதால், குறிப்பிட்ட நிலம் இப்போதுதான் அவருக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விவரம் அனைத்தும் கட்சிக்கு முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதை ஏற்று, இது தொடர்பாக எழுந்த புகாரை தலைமை நிராகரித்துவிட்டது.

எங்கள் கட்சிக்கு வசூலிக்கப்படும் நிதி குறித்து விசாரிக்க தணிக்கைக் குழு உள்ளது. இதற்கென தனியாக ஆடிட்டர் இருக்கிறார். சென்னை தி.நகரில் கட்டப்பட்டுள்ள கட்சித் தலைமை அலுவலக கட்டிடம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் முழுமையாக கடன் வாங்கி கட்டப்பட்ட கட்டிடமாகும். இதில் எங்கு முறைகேடு வந்தது?

இவ்வாறு தா.பாண்டியன் தெரிவித்தார்.

- எஸ்.கோவிந்தராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x