Last Updated : 18 Oct, 2017 10:47 AM

 

Published : 18 Oct 2017 10:47 AM
Last Updated : 18 Oct 2017 10:47 AM

சிவகாசியில் 5 லட்சம் தொழிலாளர்களை வாழவைக்கும் பட்டாசு தொழில்: ஆபத்தான சீனப் பட்டாசுகளை தவிர்க்க வேண்டுகோள்

ஒருநாள் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்காக ஓராண்டு முழுவதும் உழைக்கும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களையும், அவர்களது குடும்பத்தினர்களையும் சிவகாசி பட்டாசு தொழில் இன்றும் வாழவைத்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அந்த ஊரைச் சுற்றியுள்ள எளிய மக்களின் வாழ்வாதாரமாக திகழ்வது பட்டாசு தொழில்.

வறட்சி, விவசாயம் இன்மை போன்ற காரணங்களால் அனைத்து தரப்பினரும் உற்பத்தி தொழிலில் ஈடுபடுவதால், சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் அதிகம் அமைக்கப்பட்டன. சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

பட்டாசு ஆலைகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், பட்டாசு தொழிற்சாலைகளின் உபதொழிலாகச் செயல்படும் காகித ஆலைகள், அச்சுத் தொழில் சார்ந்தோர், வாகனப் போக்குவரத்து, சுமைப் பணி தொழிலாளர்கள், வெடிபொருள் மருந்து மற்றும் ரசாயன உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் என சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

தொடக்கத்தில் தீபாவளி, தசரா பண்டிகைகளுக்காக மட்டுமே சீசன் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தி, கடந்த சில ஆண்டுகளாக ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரணம், திருமணம், வரவேற்பு, காதுகுத்து, கோயில் விழாக்கள், தேர்தல் கொண்டாட்டங்கள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெறும்போது மட்டுமின்றி இறப்புக்கும் பட்டாசு வெடிக்கும் பழக்கம் காணப்படுவதுதான்.

நம் நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்தை சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகள்தான் பூர்த்தி செய்கின்றன. இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை பட்டாசு விற்பனை நடைபெறுகிறது.

‘டிராகன்’ வரவால் சரிவு

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக சீனப் பட்டாசுகளின் (டிராகன்) ஆதிக்கத்தால் சிவகாசி பட்டாசுத் தொழில் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் பட்டாசுத் தொழில் மட்டுமின்றி, அத்தொழிலை நம்பியுள்ள சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

40 சதவீதம் குறைவு

இதுகுறித்து, பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி, தசரா பண்டிகைகளுக்காக வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவியும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தனமாக சீனப் பட்டாசுகள் ஊடுருவியதால் சிவகாசி பட்டாசுக்கான ஆர்டர்கள் குறையத் தொடங்கின. இதனால் பட்டாசு உற்பத்தியும், விற்பனையும் இந்த ஆண்டு சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும், இந்த ஆண்டும் வட மாநிலங்களில் ஏராளமான கண்டெய்னர்களில் கள்ளத்தனமாக சீனப்பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தீபாவளியன்று அவற்றை விற்பனைக்குக் கொண்டு வரலாம். சீனப் பட்டாசுகள் ஆபத்து நிறைந்தவை. தீ பற்ற வைக்காமலேயே அவை வெடிக்கும் திறன் கொண்டவை.

எனவே, ஆபத்தான சீனப்பட்டாசுகளை பொதுமக்கள் வாங்காமல் தவிர்த்து, நம் நாட்டில் தயாராகும் பட்டாசுகளை மட்டுமே வாங்கி பயன்படுத்தி சிவகாசி பட்டாசு தொழிலாளர்களை வாழவைக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, பட்டாசுத் தொழிலாளர்கள் கூறும்போது, ‘பட்டாசுத் தொழிலே எங்களது வாழ்வாதாரம். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிட வேண்டியுள்ளது.

சிவகாசி பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களையும் அச்சுறுத்தும் சீனப் பட்டாசுகளை பொதுமக்கள் தவிர்த்தால், பட்டாசுத் தொழிலும், எங்களைப் போன்ற தொழிலாளர்களின் வாழ்வும் வளம்பெறும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x