Published : 25 Oct 2017 10:42 AM
Last Updated : 25 Oct 2017 10:42 AM
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் கந்து வட்டி கொடுமையால் சிறுநீரகத்தை விற்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. கந்து வட்டி தொடர்பாக புகார் அளித்த கம்யூனிஸ்ட் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் நாமக்கல்லில் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு பகுதியில் நெசவுத் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். மிக சொற்ப கூலித் தொகையில் பணிபுரியும் இவர்கள், தங்களது குடும்ப வறுமை காரணமாக தினக் கந்து, வாரக் கந்து அடிப்படையில் கடன் பெறுகின்றனர். வாங்கிய அசல் தொகைக்கு மேல் வட்டி செலுத்தியபோதும், அசல் தொகையை கேட்டு கடன் கொடுத்தவர்கள் நிர்பந்தம் செய்கின்றனர். பணத்தை திரும்பப் பெற அவர்கள் மேற்கொள்ளும் அணுகுமுறையால், தொழிலாளர்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கும் நிலை ஏற்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, வாங்கிய கடனை அடைக்க விசைத்தறி தொழிலாளர்கள் தங்களது சிறுநீரகத்தை விற்று, கடனை அடைத்த சம்பவங்களும் இப்பகுதியில் நடந்துள்ளன. கடன் தொல்லையால் சிரமத்துக்குள்ளாகி வருவோரை அணுகும் இடைத்தரகர்கள், அவர்களை தங்கள் வசப்படுத்தி ‘கிட்னி’ விற்பனை செய்ய ஒப்புக்கொள்ள வைக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தாலும், இது தொடர்பாக காவல்துறையில் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை.
இதுகுறித்து பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.மோகன் கூறியதாவது: பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் கந்துவட்டி பிரச்சினை அதிகளவு உள்ளது. இதுதொடர்பாக கடந்த 2010-ம் மார்ச் மாதம் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்துவிட்டு, வீடு திரும்பிய கட்சியின் கிளைச் செயலாளர் வேலுச்சாமி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இப்பகுதியில் தற்போதும் கந்து வட்டி பிரச்சினை தொடர்கிறது. இதில் இருந்து விடுபட சிறுநீரகத்தை விற்கும் சம்பங்கள் நடந்தபோதும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT