Published : 13 Jun 2023 01:43 AM
Last Updated : 13 Jun 2023 01:43 AM
இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சி கூட்டத்தில் என் மீதான கண்டன தீர்மானத்தை ரத்து செய்யாவிட்டால் அண்ணா அறிவாலயம் சென்று முதல்வரிடம் நியாயம் கேட்பேன் என முன்னாள் பெண் தலைவர் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்ட திமுக நகரச் செயலாளர் நஜூமுதீன் கவுன்சிலர் தேர்தலில் தோல்வி அடைந்தார். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த செய்யது ஜமீமா தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் 13-வது வார்டு திமுக கவுன்சிலர் மிர்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த வார்டில் நின்று நஜூமுதீன் வெற்றி பெற்றார். அதன்பின்னர் தன்னை தலைவர் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி நஜூமுதீன் மிரட்டுவதாக செய்யது ஜமீமா புகார் தெரிவித்தார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தலைவர் பதவியை செய்யது ஜமீமா ராஜினாமா செய்தார். தொடர்ந்து நஜூமுதீன் தலைவரானார்.
இந்நிலையில் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில், செய்யது ஜமீமா பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது தான் விரைவில் மீண்டும் தலைவராவேன் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த மாதம் நடைபெற்ற இளையான்குடி பேரூராட்சிக் கூட்டத்தில் செய்யது ஜமீமாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் நேற்று பேரூராட்சிக் கூட்டம் தலைவர் நஜூமுதீன் தலைமையில், செயல் அலுவலர் கோபிநாத் முன்னிலையில் நடைபெற்றது. இதில் செய்யது ஜமீமா பேசியதாவது: தொழிலாளர் தினத்தில் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கியதுக்காக கண்டனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள். இனிப்பு கொடுப்பது தவறா? என் மீதான கண்டன தீர்மானத்தை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அண்ணா அறிவாலயம் சென்று முதல்வரிடம் நியாயம் கேட்பேன்" என்று பேசினார்.
இப்படி இளையான்குடி பேரூராட்சியில் தற்போதைய தலைவருக்கும், முன்னாள் தலைவருக்கும் இடையே மோதல்போக்கு அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT