Published : 13 Jun 2023 12:47 AM
Last Updated : 13 Jun 2023 12:47 AM
புதுச்சேரி: பாஜக தமிழ் மாநிலத்தலைவர் அண்ணாமலையை அக்கட்சித் தலைமை திரும்பப் பெறக்கோரி அதிமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தமிழகம், புதுச்சேரியில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. புதுச்சேரியிலும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக- அதிமுக கூட்டணி உள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சனம் செய்து வருவதைக் கண்டித்து புதுச்சேரி உப்பளம் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள் அதிமுக கொடி உடன் அண்ணாமலையை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
அதைத் தொடர்ந்து அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தனது தகுதி தெரியாமல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை பற்றி திமுகவுக்கு வலு சேர்க்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதையும், தகுதியும் இல்லை. தேசியக்கட்சியான பாஜகவில் மாநிலத் தலைவராக செயல்பட அண்ணாமலைக்கு தலைமைப்பண்பு தேவை.
தலைமை பண்பு இல்லாமல் கூட்டணி தர்மத்தை மறந்து மலிவு விளம்பரமாக பேசுவதை புதுச்சேரி அதிமுக கண்டிக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் எங்கள் குலத்தெய்வங்கள். எங்கள் கூட்டணியில் இருந்துக்கொண்டு திட்டமிட்டு அவதூறு பரப்புவது அரைவேக்காட்டுதனமானது. தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலையை பாஜக தேசியத்தலைமை திரும்ப பெறவேண்டும்.
எதிர்காலத்தில் கூட்டணி சேர்ந்தாலும் ஏற்கமுடியாத நிலை ஏற்படும். திமுகவுக்கு வலு சேர்க்கும் பணியை திட்டமிட்டு அண்ணாமலை செய்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் அண்ணாமலை செயல்பாடுகள் திமுகவுக்குதான் சாதகமாக செயல்படுவதாக தெரிகிறது. தொடர்ந்து அண்ணாமலை அதிமுக கட்சியை விமர்சனம் செய்து வந்தால் பாஜகவுடன் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துவோம்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT