Published : 13 Jun 2023 12:26 AM
Last Updated : 13 Jun 2023 12:26 AM
சிவகங்கை: முதல்வர் தனது கடமையை செய்வது எதிர்க்கட்சித் தலைவருக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
சிவகங்கையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உடல் குறைபாடு உடையவர்களை கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் அழைத்தனர். அவர்களை ஊனமுற்றோர் என்றும், பின்னர் மாற்றுத்திறனாளிகள் என்றும் அழைத்தவர் கருணாநிதி. முதல்வருக்கு திட்டங்களை அறிவிக்கவும், தொடங்கி வைக்கவும் உரிமை உண்டு. பழனிசாமி முதல்வராக இருந்தபோது வாரத்துக்கு 3 நாட்கள் சேலத்துக்கு சென்றுவிடுவார்.
மேட்டூர் அணையை முதல்வர்கள் திறப்பது வழக்கம் தான். அவர்கள் செல்ல முடியாதநிலையில் அமைச்சர்கள் திறப்பர். முதல்வர் தனது கடமையை தான் செய்துள்ளார். அது பழனிசாமிக்கு வயிற்றெரிச்சலாக உள்ளது" என்று கூறினார்.
முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வழங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஒன்றியத் தலைவர்கள் சண்முகவடிவேல் (திருப்பத்தூர்), லதா அண்ணாத்துரை (மானாமதுரை) திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகராட்சித் தலைவர் சிஎம்.துரை ஆனந்த், மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT