Published : 12 Jun 2023 07:35 PM
Last Updated : 12 Jun 2023 07:35 PM
மதுரை: ரயில்வே துறையில் 'அவுட்சோர்சிங்' தொழிலாளர்களுக்கென புது திட்டம் கொண்டுவரப்படும் நிலையில், அவர்களின் சம்பளம், பிஎஃப் பிடித்தம் போன்ற நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய ரயில்வே துறையில் ரயில் நிலையங்கள் தூய்மை, தண்டவாளங்கள் பராமரிப்பு, தண்டவாள மேம்பாடு, புதிய ரயில் பாதை அமைத்தல், ரயில் பெட்டிகள் சுத்தம் செய்தல் மற்றும் ரயில்வே குறித்த கட்டுமான பணி என பல்வேறு நிலையில் கான்டிராக்டர் (அவுட்சோர்சிங்) அடிப்படையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிகளில் அமர்த்தப்படுகின்றனர். இவர்களுக்கு முறையான சம்பளம் நேரடியாக கிடைக்கும் வகையிலும், குறிப்பாக குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் நோக்கிலும், 'ரயில்வே சிராமிக் கல்யாண் போர்டல்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கான்டிராக்டர் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவர்களுக்கான பணி நேரம், சம்பள விகிதம், ஆதார் உள்ளிட்ட முழு விவரங்களும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, சம்பள விகிதமும் சம்பந்தப்பட்ட ரயில்வே துறையில் இருந்து நேரடியாக வங்கி மூலம் மாதந்தோறும் சம்பளமும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கையால் குழந்தைத் தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிப்பது மட்டுமின்றி உழைப்புக்குரிய முழு ஊதியம் எவ்வித சுரண்டலும் இன்றி கிடைக்க வழிவகை செய்கிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்த ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பொதுவாகவே அவுட்சோர்சிங் முறை என்றால் குறிப்பிட்ட ஒரு நபருக்கும், சம்பந்தப்பட்ட துறை அதிகரிக்கும் இடையேயான ஒப்பந்தமாக இருக்கும். ஒப்பந்தம் எடுத்த தனி நபர் மூலமே தொழிலாளர்கள் சம்பள விகிதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இப்படி, வழங்கப்படும்போது, சர்வீஸ் கட்டணம் உள்ளிட்ட சில காரணங்கள் பெயரில் குறிப்பிட்ட தொகை உழைக்கும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிப்பது வழக்கமாக இருக்கும். இது போன்ற சுரண்டலை தவிர்க்கும் பொருட்டுதான் ரயில்வே துறையில் இத்திட்டம் கடந்த ஓரிரு ஆண்டுக்கு முன்பே அறிமுகப்பட்டு நடைமுறையில் உள்ளது.
ரயில்வே பொறுத்தவரை ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் மூலம் ரயில்வே பணிகளை செய்வோருக்கு வங்கிகள் மூலம் நேரடி சம்பளம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறையின்படியே சம்பள விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. வருங்கால வைப்பு, இஎஸ்ஐ மருத்துவ வசதிகளும் முறையாக பின்பற்றி தொழிலாளர்கள் நலன் காக்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம் தொழிலாளர்கள் நலன் காக்க தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதில் தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட கான்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றையெல்லாம் தாண்டி இத்துறையில் குழந்தை தொழிலாளர்கள் முற்றிலும் ஒழிக்க இது உதவுகிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT