Published : 12 Jun 2023 09:05 AM
Last Updated : 12 Jun 2023 09:05 AM
சேலம்: சேலத்தில் திருமணிமுத்தாறு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஆற்றின் கரையில் சாலை, பூங்கா அமைத்து பல்வேறு பகுதிகளில் ஏழை, நலிந்தோருக்காக கடைகள் அமைக்க பிரத்யேக பெட்டிகள் வாங்கப்பட்ட நிலையில் அவை பயன்பாட்டுக்கு வராததால் சேதமடைந்து வருகின்றன.
சேலம் மாவட்டம் சேர்வராயன்மலையில் உற்பத்தியாகி, மஞ்சவாடி கணவாய் வழியாக சேலத்துக்கு திருமணிமுத்தாறு பாய்ந்தோடி வருகிறது. இது காவிரி ஆற்றின் துணை நதியாக உள்ளது. ஒரு காலத்தில் திருமணிமுத்தாறானது வற்றாத ஜீவநதியாக இருந்தது. தற்போது, சேலம் மாநகரில் சாக்கடை கழிவுகளை தாங்கிச் செல்லும் ஆறாக மாறிவிட்டது.
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் திருமணிமுத்தாறு சுமார் 120 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, பரமத்தி வேலூரில் நன்செய் இடையாறு என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது. பொன்னி ஆறு, கன்னிமார் ஓடை, வறட்டாறு, ஏளுர் ஆறு, ராஜவாய்க்கால் ஆகியவை திருமணி முத்தாற்றின் கிளை ஆறுகளாக உள்ளன.
திருமணிமுத்தாற்றை சீர் படுத்தும் விதமாக ரூ.36 கோடியில் திருமணிமுத்தாறு, வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி திட்டம் மாநகராட்சி நிர்வாகம் மூலம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, சேலம் அணைமேடு பகுதியில் இருந்து ஆனந்தா பாலம் வரையிலும், ஆனந்தா பாலத்தில் இருந்து அப்ஸரா இறக்கம் வரையிலும் 2 கட்டமாக திருமணிமுத்தாறின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
திருமணிமுத்தாற்றின் இரு கரைகளிலும் சாலைகள் அமைத்து, பூங்காக்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி பல்வேறு பகுதிகள் மற்றும் திருமணிமுத்தாறு கரையில் பிரத்யேக பெட்டிகள் மூலம் கடைகள் வைத்து ஏழை, நலிந்தோர் கடை நடத்தவும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, திருமணிமுத்தாற்றின் இரு கரைகளிலும் கம்பி வேலி தடுப்பு அமைக்கப்பட்டு, பொதுமக்கள் குப்பை கழிவுகள் கொட்டப்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலையோரங்களில் மரக்கன்று நடவோ, பூங்கா அமைக்கவோ எவ்வித நடவடிக்கையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை.
மாநகரின் முக்கிய பகுதிகளை கடந்து செல்லும் திருமணிமுத்தாற்றின் கரையோர பகுதிகளில் சிறு வியாபாரிகள் கடைகள் வைக்க ஏதுவாக வாங்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பெட்டிகள், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிகவளாகம் பகுதியில் கேட்பாரற்று போடப்பட்டுள்ளன.
இந்த பெட்டிகள் வெயில், மழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்து உள்ளன. எனவே, திருமணி முத்தாற்றின் கரையோர பகுதிகளை பசுஞ்சோலையாக மாற்றி, வியாபாரிகள் பயனடையும் வகையில் பெட்டிகளை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT