Published : 12 Jun 2023 06:09 AM
Last Updated : 12 Jun 2023 06:09 AM
மாமல்லபுரம்: உலக பாரம்பரிய கலைச்சின்னங்கள் அமைந் துள்ளதால் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைவாக செயல்படுத்தி வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு நேரடி தொலைதூர பேருந்து சேவைகளை ஏற்படுத்த வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோயில் முகப்பில் சாலையோரம் குறுகிய இடத்தில் பேருந்து நிலையம் செயல்படுகிறது. இதனால், புதிய பேருந்து நிலையம் அமைக்க கருகாத்தம்மன் கோயில் அருகே 6.79 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மேலும், கடந்த 1992-ம் ஆண்டு பேருந்து நிலையம் அமைக்க புதுநகர் வளர்ச்சி குழுமம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், பூர்வாங்க பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசு மாமல்லபுரத்தில் புதிய பேருந்து நிலைய திட்டத்தை அறிவித்து ரூ.18 கோடி நிதி ஒதுக்கியது. இதில், பயணிகளுக்கான ஓய்வறைகள் உட்பட அடிப்படை வசதிகளுடன், சுமார் 50 பேருந்துகள் நிறுத்தி இயக்கும் வகையில் பேருந்து நிலையம் அமைக்க புதுநகர் வளர்ச்சி குழுமம் திட்டமிட்டது. மேலும், மத்திய பொதுப்பணித்துறை மூலம் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு இத்திட்ட பணிகள் வழங்கப்பட்டன.
ஆனாலும் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், பணிகளை மேற்கொள்ள முடியாது என மத்திய பொதுப்பணித்துறை கடந்த 2021-ம் ஆண்டு புதுநகர் வளர்ச்சி குழுமத்துக்கு கடிதம் வழங்கி, தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், புதிய பேருந்துநிலைய திட்ட பணிகள் தொடங்குவது எப்போது என உள்ளூர் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தொலைதூர பேருந்துகள்: மேலும், நாள்தோறும் ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து சென்னை கோயம்பேடு, புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களுக்கு செல்ல நேரடி தொலைதூர பேருந்து சேவைகள் இல்லை. இதனால், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று தொலைதூர பேருந்துகளில் பயணிக்க வேண்டியுள்ளது. மாநகர பேருந்துகளும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இயக்கப்படுவதால் நடுத்தர மக்கள் நிம்மதியாக சுற்றுலா வந்து செல்ல முடியவில்லை.
கரோனா தொற்று பரவலுக்கு முன்பு, மாமல்லபுரத்தில் இருந்து பெங்களூர், திருப்பதி பகுதிகளுக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது, இப்பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வெளிமாநில பயணிகள் பேருந்துக்காக பெரிதும் சிரமப்படும் நிலை உள்ளது. அதனால், புதிய பேருந்து நிலைய திட்டத்தை விரைவுப்படுத்தி தொலைதூர பேருந்து சேவைகளை வழங்க வேண்டும் என உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, மல்லை தமிழ் சங்க தலைவர் சத்யா கூறியதாவது: மாமல்லபுரம் உலக பாரம்பரிய சின்னங்களை கொண்ட பழமையான நகராமாக விளங்குவதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. ஆனால், தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகள் இல்லை. அருகில் உள்ள கேரளா மாநிலம் திருவனந்தபுரம், பெங்களூர், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கான நேரடி பேருந்து சேவைகள் ஏற்படுத்தினால், பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும்.
இதுதவிர, தமிழக சுற்றுலாத் துறை சார்பில் மாமல்லபுரம், வேடந்தாங்கல், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட அருகில் உள்ள சுற்றுலா நகரங்களை இணைக்கும் வகையில் பேருந்து சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தலாம். மேலும், மத்திய அரசின் சார்பிலும் பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து மாமல்லபுரத்துக்கு சுற்றுலா பேருந்துகள் இயக்கினால், வெளிமாநில சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதுதவிர, மாமல்லபுரம் நகரப்பகுதியில் சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம். இதன்மூலம் உள்ளூர் மக்களும் பயனடைவர். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து, சிற்பி பாஸ்கரன் கூறியதாவது: கடற்கரை கோயிலின் முகப்பு பகுதியில் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதால் கடற்கரை கோயில் மற்றும் கடற்கரைக்கு செல்லும் சாலையில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அரசு, தனியார் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும், ஸ்தலசயன பெருமாள் கோயில் முகப்பில் உள்ள பிரதான சாலையில் நிறுத்தி இயக்கப்படுகின்றன.
இதனால், நகரச்சாலைகள் முழுவதும் வாகன நெரிசலில் சிக்கிதவிக்கிறது. குறிப்பாக, விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் அதிகளவில் வாகனங்கள் வருவதால், உள்ளூர் மக்கள் தங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்ல முடிவதில்லை. மேலும், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக மக்கள் கவனத்தை ஈர்த்த மாமல்லபுரத்தில், பேருந்து நிலைய வசதியை ஏற்படுத்த தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து, திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி கூறும்போது, "மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையம் அமைப்பது குறித்து சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தில், வெட்டுத் தீர்மானம் கொண்டு வந்தேன். இதன் மூலம், மாமல்லபரத்தில் ரூ.50 கோடி மதிப்பில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தொலைதூர பேருந்துகள் இயக்கவும் வலியுறுத்தப்படும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT