

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முதல்வர் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அதில், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக திறந்து வைக்கிறது என்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருவது தொடர்பான கேள்விக்கு, "தொடர்ந்து இதற்கு நாங்கள் விளக்கம் அளித்து வருகிறோம். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை அவர் மருத்துவமனையாக மாற்றினார். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார். இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிய வாய்ப்பு இல்லை." என்று பதில் அளித்தார்.
2 முறை தமிழர்கள் பிரதமராகும் வாய்ப்பு பறிபோனதற்கு திமுக தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு,"வெளிப்படையாக இந்தக் கருத்தை அவர் கூறி இருந்தால் உரிய விளக்கம் அளிக்கப்படும். தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற கூறியது மகிழ்ச்சியாக உள்ளது. பிரதமர் மோடி மீது அமித் ஷாவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை. 2024ம் ஆண்டில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக தமிழர் வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் ஆகியோர் உள்ளார்கள். ஒரு வேளை இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று நான் நினைக்கிறேன்." என்று பதில் அளித்தார்.
தமிழகத்துக்கான திட்டங்கள் குறித்த அமித் ஷாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, "தமிழகத்துக்கு என்று பிரத்யேகமாக என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு அமித் ஷா பதில் சொல்லவில்லை" என்றார்.