Published : 12 Jun 2023 04:02 AM
Last Updated : 12 Jun 2023 04:02 AM
சேலம்: சேலத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.1,367.47 கோடி மதிப்பிலான ஈரடுக்கு பேருந்து நிலையம், வணிக வளாகம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
ரூ.235.82 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 50,202 பேருக்கு ரூ.170.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ‘5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை 2 ஆண்டுகளில் செய்திருப்பதே திமுக ஆட்சியின் சாதனை’ என்று அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் 3 நாள் பயணமாக கடந்த 10-ம் தேதி மாலை சேலம் வந்தார். முதல் நாளன்று சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். 2-வது நாளான நேற்று,சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
இதையடுத்து, சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதில், ஈரடுக்கு பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம், வஉசி மார்க்கெட், நேரு கலையரங்கம் உட்பட ரூ.1,367.47 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார்.
ரூ.235.82 கோடி மதிப்பிலான 331 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 50,202 பேருக்கு ரூ.170.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சேலம் மாவட்டத்துக்கு 7 முறை வந்து, பல்வேறு திட்டப் பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளேன். கடந்த 2 ஆண்டுகளில் வந்ததைவிட கூடுதல் திட்டங்களை சேலத்துக்கு கொண்டுவர உள்ளோம்.
திமுக ஆட்சி அமைந்த பிறகு, மாவட்டம்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சுற்று நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 2-ம் சுற்று நிகழ்ச்சி நடக்கிறது. அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு பணியாற்றி வருகிறது.
தொடர்ந்து 3-வது ஆண்டாக குறித்த நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால், டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிமுக கடந்த 10 ஆண்டுகாலமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை பாழ்படுத்தியதோடு, மத்திய அரசு நீட்டிய இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டனர். இதனால், தமிழகத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. உதய் திட்டத்தில் கையெழுத்து போட்டதால்தான், மின் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதற்காக, நிதி இல்லை என்று காரணம் காட்டி புதிய திட்டங்களை அறிவிக்காமல் இல்லை.சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம் என்ற திமுக கோட்பாட்டின்படி, 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய திட்டங்களை 2 ஆண்டுகளில் செய்து முடித்ததே திமுக ஆட்சியின் சாதனை. இதனால் ‘நம்பர் ஒன்தமிழ்நாடு’ என்ற பெயர் கிடைத்துள்ளது.
முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதன் மூலம்ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. உலக முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய மையமாக தமிழகம் உள்ளது.
கடந்த 10 ஆண்டுகள்போல இல்லாமல், தற்போது தொழில் தொடங்க நல்ல சூழல் இருப்பதை வெளிநாடுகளுக்கு சுட்டிக் காட்டியுள்ளோம். வளமான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் நடைபோடுகிறது. இதை வெளிச்சம் போட்டு காட்டினால்தான் பல்வேறு நிறுவனங்கள் நம்மை நோக்கி வரும்.
ஆனால், தமிழகத்தை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம்,அதைக்கூட கொச்சைப்படுத்துகிறது. அதுபற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களால் அழிக்கத்தான் முடியும், ஆக்க முடியாது. ‘போற்றுவார் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவார் தூற்றட்டும்’ என்ற மனநிலையோடு இதை கடந்து செல்கிறேன். மக்கள் பணியாற்றவே நேரம் போதவில்லை. அதனால், இவர்களுக்கு பதில் சொல்ல நேரம் இல்லை.
தொடர்ந்து உங்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அரசு காத்திருக்கிறது. மக்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்த விழாவில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்ஆர்கே பன்னீர்செல்வம், ரகுபதி,மதிவேந்தன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர், ராஜேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT