Published : 12 Jun 2023 06:44 AM
Last Updated : 12 Jun 2023 06:44 AM

உடுமலை அருகே வீடு கட்டும்போது கிடைத்த முதுமக்கள் தாழி, எலும்புகள் - தொல்லியல் துறை மூலம் ஆய்வு நடத்த பரிந்துரை

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி மற்றும் எலும்புகள்.

உடுமலை: உடுமலை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டிய இடத்தில் பழமைவாய்ந்த முதுமக்கள் தாழி, எலும்புகள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் கிடைத்துள்ளன.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஐஸ்வர்யம் கார்டன் குடியிருப்பு மனையில், வஞ்சிமுத்து என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார். நேற்று இதற்காக குழி தோண்டியபோது சுமார் 4 அடி உயரமுள்ள முதுமக்கள் தாழி, பழங்காலக் கற்கள், எலும்புகள், பற்களுடன் கூடிய தாடை எலும்புகள் கிடைத்துள்ளன.

தகவலின்பேரில் சென்று பார்வையிட்ட தொல்லியல் ஆர்வலர்கள் கூறும்போது, “வீடு கட்டும் பணியின்போது கண்டறியப்பட்டுள்ள பொருட்கள் பெருங் கற்காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம். சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்க வாய்ப்புள்ளது. தொல்லியல் துறையினர் இவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல உண்மைகள் தெரியவரும்.

அதே பகுதியில் உள்ள கண்டியம்மன் கோயில் பகுதியில் 2012-ல் நடைபெற்ற ஆய்வில் 2,000 ஆண்டுகள் பழமையான சேரர் முத்திரைகள், பிராமி எழுத்துகள் கண்டறியப்பட்டன. பூமிக்கடியில் மேலும் பல வியக்கத்தக்க பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது” என்றனர்.

இதையறிந்த கிராம மக்கள் கூட்டம்கூட்டமாக சென்று அவற்றை ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஆட்சியருக்கு பரிந்துரை: இதுகுறித்து வருவாய் துறையினர் கூறும்போது, ‘‘மேற்படி பகுதியில் தொல்லியல் துறை மூலம் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதுவரை கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தொடர்புடைய நிலத்தின் உரிமையாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x