Published : 12 Jun 2023 06:32 AM
Last Updated : 12 Jun 2023 06:32 AM

பட்டுக்கோட்டை | ஏரியில் மண் அள்ளிய விவகாரத்தில் 4 பேர் கைது - டிஎஸ்பியிடம் திமுக எம்எல்ஏ மிரட்டியதாக புகார்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடியில் உள்ள ஓட்டேரி ஏரியில் விதிகளை மீறி அதிக ஆழத்துக்கு மண் அள்ளப்பட்டுள்ள பகுதி.

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே விதிகளை மீறி அதிக ஆழத்துக்கு ஏரியில் மண் அள்ளியதாக 4 பேர் கைது செய்யப்பட்டு, கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரத்தில் டிஎஸ்பியிடம் திமுக எம்எல்ஏ மிரட்டியதாக வெளியாகி உள்ள ஆடியோ வைரலாகி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி கிராமத்தில் உள்ள ஓட்டேரி ஏரியில், நிர்ணயம் செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக ஆழத்தில் மண் அள்ளப்படுவதாக நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை டிஎஸ்பி (பொறுப்பு) பாலாஜி-க்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அவரது உத்தரவின்பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் திட்டக்குடி சென்று பார்த்தபோது, அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை மீறி, 25 அடி ஆழத்தில் மண் அள்ளுவது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த மண் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன்கள், டிராக்டர் உள்ளிட்டவற்றை போலீஸார் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதுதொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை தனி வருவாய் ஆய்வாளர் பா.ராஜேஷ் அளித்த புகாரின் பேரில், 5 பொக்லைன்கள், ஒரு டிராக்டர் ஆகியவற்றை பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இவ்விவகாரத்தில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரா.மாதரசன்(25), மா.கலையரசன்(20), கி.ஸ்ரீதர்(26), அ.குமார்(30) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை தொகுதி திமுக எம்எல்ஏ கா.அண்ணாதுரை, டிஎஸ்பி பாலாஜியிடம் மிரட்டலாக பேசியதாக ஆடியோ வெளியாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து எம்எல்ஏ அண்ணாதுரையிடம் கேட்டபோது, ‘‘இந்த விவகாரத்தில் டிஎஸ்பியிடம் செல்போனில் நான் பேசியபோது, பறிமுதல் வாகனங்களை விட்டுவிடுமாறு, கோரிக்கையாகத்தான் கேட்டேன். நான் யாரையும் மிரட்டவில்லை’’ என்றார்.

இதுகுறித்து டிஎஸ்பி பாலாஜியிடம் கேட்டபோது, ‘‘20 அடிக்கு மேல் மண் அள்ளுவதாக புகார் வந்ததால்தான் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எம்எல்ஏ பேசியபோது, வழக்குப் பதிவு செய்துவிட்டதாக கூறிவிட்டேன். இதில், வேறு ஏதும் இல்லை’’ என்றார்.

ஆடியோவில் உள்ள விவரம்:

எம்எல்ஏ கா.அண்ணாதுரை: திட்டக்குடியில் வட்டாட்சியர் அனுமதியுடன் தான் மண் அள்ளி இருக்காங்க, வட்டாட்சியர் சம்பவ இடத்தை பார்த்துவிட்டு போய் உள்ளார், எனக்கும் தகவல் கொடுத்தார். நான் மண் அள்ளுவதை நிறுத்த சொல்லிவிட்டேன். அவர்களும் நிறுத்திவிட்டனர். பிரச்சினை சுமுகமாக முடிந்துவிட்டது. ஆனால், போலீஸார் பறிமுதல் செய்த வாகனங்களின் சாவியை தர மறுக்கின்றனர். நீங்கள் கூறினால் தான் சாவியை கொடுப்பார்களாம்.

டிஎஸ்பி: தகவல் மேலிடம் வரை சென்றுவிட்டது. எங்களது மேல் தப்பு வந்துவிடும், 25 அடி வரை மண் அள்ளியுள்ளனர். இதுவே பெரிய குற்றமாகிவிடும். மண் அள்ள கொடுத்த தேதியும் முடிந்துவிட்டது.

எம்எல்ஏ: எனக்கும் ரூல்ஸ் தெரியும், நானும் அட்வகேட்தான். என்ன நடவடிக்கை எடுக்கனுமோ எடுங்க, அதுக்கெல்லாம் நான் விளக்கம் சொல்ல முடியாது. வட்டாட்சியர் சொல்லியிருக்கார். நாங்கள் உங்க கிட்ட சொல்கிறோம். முடிந்தால் செய்யுங்க, இல்லாட்டி போங்க, நீங்கள் ஒன்றும் இதற்கு அத்தாரிட்டி கிடையாது. வட்டாட்சியர் தான்.

டிஎஸ்பி: நான் ஒபே பண்ண முடியாது சார், கேஸ் போடுகிறேன் பார்த்துக்கங்க.

எம்எல்ஏ: பாத்துக்க., பாத்துக்க.

இவ்வாறு அந்த ஆடியோ உரையாடலில் பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x