Published : 12 Jun 2023 06:21 AM
Last Updated : 12 Jun 2023 06:21 AM
புதுக்கோட்டை: ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்பதற்காக, தமிழர்களுக்கு பிரதமர் பதவி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கலாமே தவிர, நிச்சயம் பிரதமர் பதவியைக் கொடுக்க மாட்டார்கள்.
ஜூன் 23-ம் தேதி பாட்னாவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கிவிடும். மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கூட்டணி அமைந்துவிடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிராக மாநில அளவில் கூட்டணி உருவாகும். 2024-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது. பிரதமர் வேட்பாளரை முன்மொழிந்துதான் மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாஜகவை வீழ்த்தவேண்டும் என்ற ஒற்றை தீர்மானத்துடன் தேர்தலை சந்திப்போம்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலைக்கு ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக மத்திய உள் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதிஒதுக்காமல், மக்கள் விரும்பாத திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தவறுகள் நடக்கலாம். அதற்காக, ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறமுடியாது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT