Published : 12 Jun 2023 06:00 AM
Last Updated : 12 Jun 2023 06:00 AM
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் நோக்கிப் புறப்பட்ட மின்சார ரயில் பேசின்பாலம் அருகேதடம் புரண்டது. ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால், பெரும்சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும், ரயில் சேவை இரண்டரை மணி நேரம் வரை பாதிக்கப்பட்டது.
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூருக்கு 9 பெட்டிகள் கொண்ட புறநகர் மின்சார ரயில் நேற்று காலை 9.25 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் பேசின்பாலம் அருகே காலை 9.30 மணிக்குச் சென்றபோது, மின்சார ரயிலின்பெண்கள் பெட்டி (கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டி) தடம் புரண்டது. இதன் சத்தத்தைக் கேட்டு,ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
உடனே ரயில்வே கட்டுப்பாட்டுஅறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வேபொறியாளர்கள், ஊழியர்கள் பெட்டியை தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த, ரயில்வே கோட்டமேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பணிகளைப் பார்வையிட்டனர். முற்பகல் 11.45 மணிக்கு ரயில்பெட்டியை தண்டவாளத்தில் ஏற்றிரயிலுடன் இணைத்து பேசின்பாலம்பணிமனைக்கு அனுப்பினர். நண்பகல் 12 மணிக்கு ரயில் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இச்சம்பவம் காரணமாக, சென்னை மூர்மார்க்கெட் வளாகத்திலிருந்து அரக்கோணம், திருவள்ளூர், ஆவடிக்கு செல்லும் ரயில்சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டது. மொத்தம் 12 மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுபோல, மறுமார்க்கமாக, திருவள்ளூர், அரக்கோணம், ஆவடி உள்ளிட்ட பகுதியிலிருந்துசென்னை மூர்மார்க்கெட் வளாகத்துக்கு இயக்கப்பட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு, மீண்டும்வந்தடைந்தன. இதனால், பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய விரைவு ரயிலைப் பிடிக்க முடியால்தவறவிட்டு, மாற்றுப் போக்குவரத்தை நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். ரயில் சேவை பாதிப்பால், பயணிகள் நேற்று கடும் அவதியடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT