Published : 12 Jun 2023 06:43 AM
Last Updated : 12 Jun 2023 06:43 AM
சென்னை: ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அரசு எப்போதும் துணைநிற்கும். எனவே, மாணவர்கள் தன்னம்பிக்கையோடு கற்கவும், ஆசிரியர்கள் தன்னம்பிக்கையோடு கற்பிக்கவும் வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன. இதையொட்டி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
புதிய கல்வி ஆண்டு ஜூன் 12-ம்தேதி (இன்று) தொடங்க இருக்கிறது. இப்புதிய கல்வி ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களை சிந்தனையாலும் செயலாலும் கற்றல் கற்பித்தலில் கரம் பற்றிஅழைத்துச் செல்லும் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள். ``கல்வி சிறந்த தமிழ்நாடு'' என்றார் பாரதியார்.
அளப்பரிய சாதனைகள்: தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக்க ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர். அவரது தலைமையிலும் வழிகாட்டுதலிலும் பள்ளிக்கல்வித் துறை கடந்த 2 ஆண்டுகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்து வருகிறது. இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா என பள்ளிக்கல்வித் துறை முன்னெடுக்கும் முத்தான திட்டங்களால் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடுகிறது.
எது கல்வி? -``உண்மையான கல்வி என்பது ஒரு குழந்தையின் உடல்-மனம்-ஆன்மா ஆகிய மூன்றிலும் ஆகச்சிறந்த மேம்பாட்டை வெளிக்கொணர்வதே ஆகும்'' என்றார்தேசத் தந்தை காந்தியடிகள். ``கல்விஎன்பது அறியாமை, மூடத்தனங்களை அகற்றுவதாகவும், அறிவை அள்ளிக்கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்'' என்றார் பெரியார்.``போட்டியும் பொறாமையும் பொய்ச் சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நேராக நடந்து செல்ல நமக்குத் தேவையாக இருப்பது கல்வி மட்டுமே'' என்றார் அண்ணா. ``ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினால் அதைக்கொண்டு ஆயிரம் விளக்குகளை ஏற்றலாம்'' என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் நூற்றாண்டு விழா காணும் இக்கல்வியாண்டில் அவரின் சிந்தனைகளை மனதில் கொண்டு செயல்படுவோம். ``எல்லார்க்கும் எல்லாமும்'' என்பதே தமிழக அரசின் தாரக மந்திரம். அதைஅடையக் கல்வி ஒன்றே சாதனம்.
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தமிழக அரசு எப்போதும்துணை நிற்கும். எனவே, மாணவர்கள் தன்னம்பிக்கையோடும் கற்கவும் ஆசிரியர்கள் தன்னம்பிக்கையோடு கற்பிக்கவும் அனைவரின் எதிர்காலமும் சூரியனாய்பிரகாசிக்கவும் வாழ்த்துகிறேன்.இக்கல்வியாண்டு சிறப்பாக அமைய சீர்மிகு வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment