Published : 14 Oct 2017 11:01 AM
Last Updated : 14 Oct 2017 11:01 AM
அக்.14 உலக தர நிர்ணய தினம் |
ஒவ்வொரு பொருளுக்கும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படும் ஒரே சீரான தரம் அவசியம். இதனை கருத்தில் கொண்டு சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ஐஎஸ்ஓ) நிறுவப்பட்டது. தற்போது 162 உறுப்பு நாடுகளுடன் இந்த அமைப்பு செயல்படுகிறது. இதில், இந்தியாவும் ஒரு உறுப்பு நாடாக உள்ளது. இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) செயல்பட்டு வருகிறது.
உலக அளவில் தரம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க ஆண்டுதோறும் அக்டோபர் 14-ம் தேதி ஐஎஸ்ஓ-வின் உறுப்பு நாடுகள் உலக தர நிர்ணய தினத்தை கொண்டாடி வருகின்றன. இந்தியாவில் அந்த பணிகளை பிஐஎஸ் செய்து வருகிறது. மேலும், இந்தியாவிலுள்ள பொருட்களை தர நிர்ணயம் செய்து பிஐஎஸ் சான்றிதழ் வழங்கி வருகிறது. அதில் முக்கியமானவை ஐஎஸ்ஐ மற்றும் ஹால்மார்க் முத்திரைகள் ஆகும்.
பொதுமக்கள் தரம் குறைவான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க ‘ஹால்மார்க்’ முத்திரை திட்டத்தை பிஐஎஸ் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, பிஐஎஸ்-அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் வியாபாரிகள் தரும் நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் தரம் பதிவு செய்யப்படுகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் 22 காரட் தங்கத்துக்கு 916 முத்திரை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானி டி.ரங்கசாமி ‘தி இந்து’விடம் கூறுகையில், “இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் குறையாததால் அதன் தேவை அதிகரித்து வருகிறது. அதேசமயம், மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் ஹால்மார்க் முத்திரையுள்ள நகைகளை வாங்க தொடங்கியுள்ளனர். இதனால், ஹால்மார்க் உரிமம் பெறும் நகை விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2015-16-ம் ஆண்டில் 1,571 விற்பனையாளர்கள் ஹால்மார்க் உரிமம் பெற்றிருந்தனர். இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஒன்றரை ஆண்டில் மட்டும் 227 விற்பனையாளர்கள் ஹால்மார்க் உரிமம் பெற்றுள்ளனர். தற்போது வரை மொத்தம் 1,798 பேர் உரிமம் பெற்றுள்ளனர். அவ்வாறு உரிமம் பெற்ற விற்பனையாளர்களின் விவரங்களை www.bis.gov.in இணையதளத்தில் மக்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஐஎஸ்ஐ, ஹால்மார்க் முத்திரையிட்ட பொருட்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 044-22541442, 22542519, 22541216 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு நுகர்வோர் புகார் அளிக்கலாம் அல்லது புகார் குறித்த விவரங்களை sro@bis.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்”. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT