Published : 12 Jun 2023 04:15 AM
Last Updated : 12 Jun 2023 04:15 AM
புதுச்சேரி: 9 ஆண்டு மூடலுக்கு விரைவில் விடிவு கிடைத்து, புதுச்சேரியில் விரைவில் திருப்பதி தேவஸ்தான திருக்கோயில் கட்டுமானப் பணி நடைபெற உள்ளது. இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி நேருவீதியில் பழமையான திருப்பதி தேவஸ்தான திருக்கோயில் இருந்தது. திருப்பதி செல்ல இயலாத பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம். புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழக பக்தர்களும் வருவர். இங்கு திருப்பதி லட்டு பிரசாதமும் இங்கு கிடைக்கும். திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் கோயிலின் முதல் தளத்தில் தரிசன டிக்கெட்டுக்கு முன்பதிவும் செய்யலாம்.
இந்தச் சூழலில், கோயில் கட்டுமானத்தில் பழுது ஏற்பட்டதால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. தரிசன டிக்கெட் முன்பதிவு கூடமும் மூடப்பட்டது. இந்நிலையில் கோயில் முன்பக்க கூரை இடிந்தது. பின்னர் கோயில் மூடப்பட்டது. புதியகோயில் கட்டுவதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதி அகற்றப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாகியும் கோயில் கட்டப்படவில்லை.
இது தொடர்பாக திருக்கோயில் பாதுகாப்பு கமிட்டி செயலர் பாலாஜி, பொதுச்செயலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் கூறுகையில், "திருப்பதி கோயிலுக்கு தினமும் தரிசனம் செய்யும் பக்தர்கள் ஏராளம். பக்தர்கள் திருப்பதி செல்ல இயலாதோர் இக்கோயிலில் தரிசிப்பர். 9 ஆண்டுகளுக்கு மேலாக இக்கோயில் இடிந்துள்ளது. தேவஸ்தானத்தில் புகார் தந்தும் பலனில்லை.
புதுச்சேரி அரசு கடந்த 10.1.22-ல் புதிய கோயில் கட்ட அனுமதி தந்தது. ஆனாலும் கட்டப்படவில்லை. திருப்பதி கோயிலை புதுச்சேரியில் கட்டக் கோரி திருப்பதி தேவஸ்தான தலைவர், நிர்வாக அதிகாரி, ஆந்திர முதல்வர் உள்ளிட்டோருக்கு மனு தந்தோம். தற்போது இரண்டு மாதங்களாக இடிந்த கோயில் முன்பு சனிக்கிழமை மாலையில் பஜனை செய்கிறோம். திருப்பதி கோயிலை கட்டாமல் இருக்கக் கூடாது. மக்கள் பெருமாளை தரிசனம் செய்ய இயலாமல் உள்ளதை சரி செய்ய வேண்டும்" என்றனர்.
இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டியை சந்தித்தது தொடர்பாக எம்எல்ஏ அசோக் பாபு கூறுகையில், "நேரு வீதியில் தேவஸ்தான கோயில் கட்ட மனு அளித்தோம். விரைவில் திருப்பதி தேவஸ்தான திருக்கோயிலை இங்கு கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்று சுப்பாரெட்டி குறிப்பிட்டார். பொறியாளர்களிடம் திட்ட அறிக்கை தயாரிக்கவும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் விரைவில் மக்கள் தரிசிக்கும் வகையில் திருப்பதி கோயில் கட்டப்படவுள்ளது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT