Published : 11 Jul 2014 10:00 AM
Last Updated : 11 Jul 2014 10:00 AM

திமுக ஆட்சியில் விதிமீறல்கள்: அமைச்சர் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் எத்தனையோ விதிகள் தளர்த்தப்பட்டு கட்டிடத் துக்கான திட்ட அனுமதி வழங்கப் பட்டுள்ளன என்று அமைச்சர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் வியாழக் கிழமை நடந்த வீட்டுவசதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

மவுலிவாக்கத்தில் 0.55 சதவீத சாலை அகல குறைபாட்டை தளர்த்தியது குறித்து விமர்சனம் செய்தவர்கள், தங்களது ஆட்சிக் காலத்திலே 55 சதவீத விதிகளை தளர்த்தியுள்ளனர். வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்குக்கு அடுக்குமாடி கட்டிட விதிகளில் முக்கியமான பலவற்றை தளர்த்தி திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எம்எஸ்பி பேனல் அனுமதி மறுத்தும், பரிந்துரைக்கு மாறாக விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அரசு ஆணை எண் 210, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நாள் 17.11.2009-ல் பல விதிகளை தளர்த்தி திட்ட அனுமதி வழங்க உத்தரவிட்டுள்ளனர். சாலையின் அகலம் 18 மீட்டராக இருக்க வேண்டிய நிலையில் 8.10 மீட்டர் அகலமே உள்ள சாலையில் பலமாடி கட்டிடத்தை அனுமதித்துள்ளனர்.

இந்தக் கட்டிடம் 5 திரையரங்குகள் கொண்ட ஒரு பன்னோக்கு வணிக வளாகமாகும். பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்ல ஏதுவாக காரிடாரின் அகலம் 2.4 மீட்டர் இருக்க வேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 1.37 மீட்டர் அகலமே உள்ள காரிடார் அனுமதிக்கப்பட்டுள்ளது

இதுபோன்று அவர்களது ஆட்சியில் எத்தனையோ விதிமீறல்கள் தளர்த்தப்பட்டு திட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறிய அமைச்சர், விதிகள் தளர்த்தப்பட்ட கட்டிடங்களை பட்டியலிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x