Published : 23 Oct 2017 10:15 AM
Last Updated : 23 Oct 2017 10:15 AM
கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபடுவதை தடுக்க பெண் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் ‘பஸ் தினம்’ என்ற பெயரில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து அதன் மீது ஊர்வலமாக செல்வார்கள். பேருந்தின் உள்ளேயும், மேற்கூரை மீதும் நடனமாடுவார்கள். இது பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தியதால் பஸ் தினம் கொண்டாட சென்னை காவல் ஆணையர் தடை விதித்தார். இதனால் பஸ் தின கொண்டாட்டங்கள் கட்டுக்குள் வந்தபோதிலும், கல்லூரி மாணவர்கள் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரம் ஓடும் மின்சார ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கல்லூரி மாணவர்கள் சிலர் நெமிலிச்சேரி ரயில் நிலையத்தின் பிளாட்பார தரையில் தேய்த்தப்படி சென்றனர். இந்த காட்சிகள் பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இனிமேல், இதுபோன்ற சம்பவங்கள் கல்லூரி மாணவர்களிடையே நடந்து விடக்கூடாது என்பதற்காக கல்லூரி வாயிலாக தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில், கூடுதல் காவல் ஆணையர் பொறுப்பில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. முன்பெல்லாம் மோதலில் ஈடுபடும் மாணவர்களை எச்சரித்து அனுப்பி விடுவோம். அவர்கள் மீண்டும் அதே போன்று தவறு செய்யக்கூடாது என்பதற்காக பயமுறுத்தும் வகையில் எழுதி வாங்குவோம், ஆனால், தற்போது சில மாணவர்கள் எவ்வளவு எச்சரித்தாலும் கேட்பதில்லை. இதனால் வேறு வழியில்லாமல் சிலரை கைது செய்துள்ளோம். இந்த ஆண்டு மட்டும் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் மீண்டும் மோதல்களில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக சில கல்லூரிகளில் போலீஸாரை நிறுத்தி உள்ளோம்.
மேலும், அனைத்து அரசு கல்லூரிகளிலும் நுண்ணறிவு பிரிவு போலீஸார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதற்காக பெண் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை உள்ளது. இந்த ஆய்வாளர் தலைமயிலான குழுவினர் நுண்ணறிவு துணை ஆணையரிடம் வாரம் தோறும் கல்லூரி நிலவரம் குறித்து அறிக்கை அனுப்புவார்கள். தகராறு செய்யும் மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
விரைவில் அனைத்து கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளோம். வழக்கு பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அரசு வேலைக்கு செல்ல முடியாது, தனியார் பணிக்கு கூட காவல் நிலைய வழக்குப் பதிவு தடையை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT