Published : 28 Oct 2017 12:29 PM
Last Updated : 28 Oct 2017 12:29 PM

அரசும், விவசாயிகளும் காட்டிய அலட்சியம்: பராமரிப்பின்றி தூர்ந்துபோன வாய்க்கால்கள் - தண்ணீரின்றி பாதிக்கப்படும் சம்பா பயிர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் ஆறு மற்றும் பாசன வாய்க்கால்களில் முறையான தூர் வாரும் பணிகள் நடைபெறவில்லை. ஆற்றில் ஓடுகின்ற தண்ணீர் கிளை வாய்க்கால்களில் பாசனத் தலைப்புகளின் வழியாக பாய்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த 2-ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டபோதும், கடந்த 22-ம் தேதி மாவட்டம் முழுவதும் பெய்த கனமழைக்கு பிறகுதான் ஆறுகளில் வந்த தண்ணீர் அனைத்து ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு வாய்க்கால்களில் பாய்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதன் மூலம் வாய்க்கால்களின் முதல் மடையில் இருந்த நிலங்களுக்கு மட்டும்தான் தண்ணீர் செல்கிறது.

அதே நேரத்தில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் முற்றிலும் பராமரிப்பில்லாமல் இருப்பதால், பல இடங்களில் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. இதனால் ஆங்காங்கே சம்பா பயிர்கள் தண்ணீரின்றி பாதிக்கப்பட்டு வருகின்றன.

உதாரணமாக பெருகவாழ்ந்தான் அருகே கர்ணாவூர், துண்டுக் கருணாவூர் பகுதிகளில் இதன் பாதிப்பை நேரடியாகக் காண முடிகிறது. இந்தப் பகுதியில் மழையும் சரியாகப் பெய்யாத நிலையில் பெரும்பாலான விளை நிலங்களில் தெளித்த பயிர்கள் அனைத்தும் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல வடுவூரிலிருந்து பிரிந்து வரும் வடசேரி வாய்க்காலில் ஓவேல்குடி, கருவாக்குறிச்சி, நல்லிக்கோட்டை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. பரவலாக மாவட்டம் முழுவதும் இதே நிலை நிலவுகிறது.

இதுபற்றி கர்ணாவூர் விவசாயி வில்லியம் கூறியபோது, “சி, டி பிரிவு வாய்க்கால்கள் முற்றிலும் தூர்ந்து போய்விட்டன. முன்பெல்லாம் தண்ணீர் வந்தவுடன் விவசாயிகளே தங்களது வயல்களின் அருகாமையில் உள்ள வாய்க்கால்களில் அடைப்புகளை சரிசெய்து வந்தனர். அந்த நிலை மாறி 100 நாள் வேலையில் இந்தப் பணியை செய்தனர். தற்போது அந்தப் பணியும் நடைபெறவில்லை. உள்ளாட்சி அமைப்பு நிர்வாகமும் சரிவர செயல்படவில்லை. எனவே, இந்தக் குறையை யாரிடம் போய் சொல்வதென்றே தெரியவில்லை.” என்றார்.

இதுகுறித்து வேளாண் பொறியியல் துறை பொறியாளர்கள் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாகவே இந்தப் பரமரிப்புப் பணி நடைபெறவில்லை.

இதற்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. முன்பெல்லாம் விவசாயிகள் குழு உணர்வோடு செயல்பட்டு தங்களது பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தனர். அரசு இலவசத் திட்டங்கள், மானியங்களை அறிவிக்கத் தொடங்கிய பிறகு இந்தப் பணியையும் அரசுதான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து அரசும் விவசாயிகளுக்கு வழிகாட்டல் செய்யவில்லை. வேளாண் இயந்திரங்களை மானியத்தில் வழங்க குழு அமைக்கச் சொல்லும் அரசு, வாய்க்கால் பராமரிப்பில் ஈடுபடும் பகுதிகளைச் சார்ந்த விவசாயிகளை ஊக்கப்படுத்த திட்டங்கள் அறிவிப்பதில்லை. தற்போது மாவட்டம் முழுவதும் முதல் மடையில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் பாய்வதும், பின்பகுதியில் உள்ள நிலங்கள் காய்ந்து போவதுமான போக்கு நிலவுகிறது.

அவ்வப்போது மழை பெய்து பயிர்களை காப்பாற்றி வருகிறது. அரசு விவசாயிகளை விழிப்புணர்வு அடையச்செய்து குழு உணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். விவசாய சங்கங்களும் விவசாயிகளிடம் பழைய நடைமுறைகளை தொடர வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x