Published : 11 Jun 2023 08:30 PM
Last Updated : 11 Jun 2023 08:30 PM
மதுரை: மதுரை-போடி இடையே வரும் 15ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ள நிலையில், இவ்வழித்தடத்தில் முக்கிய ரயில்களை இணைக்கும் விதமாக ஜோடி ரயில்களை இயக்கவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளாவின் இடுக்கி மாவட்ட பகுதிகளில் விளையும் பணப் பயிரான ஏலக்காய், மிளகு, காபி உள்ளிட்ட பொருட்களை வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 1909-ல் மீட்டர் கேஜ் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போடி- மதுரை வரை சுமார் 87 கிலோ மீட்டருக்கான ரயில் சேவை தொடங்கியது. உலகப் போர் காரணமாக 1915ல் முதல் 1928 வரை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 முதல் 1954 வரை நிறுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு 1954 முதல் சேவை தொடர்ந்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், 2010 டிசம்பர் முதல் மதுரை -போடி ரயில் சேவை நிறுத்தப்பட்டு, அகல ரயில்பாதை பணி தொடங்கியது. தமிழகத்தில் இயற்கை அழகோடு வைகை ஆற்றங் கரையோரம் 87 கிலோ மீட்டர் கொண்ட அழகிய ரயில் பயண சேவை நிறுத்தப்பட்டதை கண்டு மக்கள் கவலை அடைந்தனர். இருப்பினும், 12 ஆண்டுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை- தேனி வரையிலான ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு மே மாதம் 26ம் தேதி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மீண்டும் ரயில் சேவையை கண்டு உசிலம்பட்டி, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி- போடி வரை 15 கிலோ மீட்டருக்கான பணி தொடர்ந்து நடந்தது. அந்த பணிகளும் முடிந்து ரயில் வேக சோதனை ஓட்டம், சிக்னல் செக்கிங் அதிவேக சோதனை ஓட்டம் என்ன பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் சமீபத்தில் நிறைவுற்றன. போடிக்கு எப்போது ரயில் சேவை கிடைக்கும் என, மக்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர். இதற்கிடையில், "ஜூன் 15 முதல் மதுரை- போடி அகல இரயில் பாதையில் மதுரை- போடிக்கு தினசரி ரயில் ஒட தொடங்கும். மேலும், சென்னை- மதுரை துரந்தோ ரயில் நீடிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, போடிக்கு வாரம் (செவ்வாய், வியாழன், ஞாயிறு) மூன்று முறை ஒரு ரயிலும் (துரந்தோ எக்ஸ்பிரஸ்) இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது" என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இவ்வழித்தடத்தில் பயணிகளின் நலன் கருதி மதுரை - போடி- மதுரை மார்க்கத்தில் மதுரையில் சில முக்கிய ரயில்களை இணைக்கும் வகையில் குறைந்த பட்சம் 4 ஜோடி பயணிகள் ரயில்களை இயக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து பயணிகள் கூறியது: ''சுமார் 13 ஆண்டுக்குப் பிறகு மதுரை- போடிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2010-ல் திறக்கப்பட்ட புனலூர் - கொல்லம் - புனலூர் அகல ரயில் பாதையில் உடனே 4 ஜோடி பயணிகள் ரயில்கள் இயக்கபட்டன. ஆனால் மதுரை -போடி வழித்தடத்தில் பெயரளவுக்கு மட்டும் ஒரே ஒரு பயணிகள் ரயில் மட்டுமே இயக்கப்படவுள்ளது. மேலும், மதுரையிலிருந்து பொள்ளாச்சி வழியாக கோவைக்கு பெயருக்கு ஒரே ஒரு பாசஞ்சர் ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.
கேரளாவிற்குள் புதிதாக திறக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 4 ஜோடி பயணிகள் ரயில்களை இயக்கி வரும் ரயில்வே நிர்வாகம் தமிழ்நாட்டிற்குள் புதிதாக திறக்கப்பட்ட மற்றும் திறக்கப்படும் அகல ரயில் பாதைகளில் வெறுமனே ஒரே ஒரு பயணிகள் ரயிலை இயக்குவ தென்பது தமிழ்நாட்டுக்கு ரயில்வே நிர்வாகம் இழைக்கும் பாரபட்சம். எனவே, மதுரை -போடி- மதுரை ரயில் பாதையிலும் , மதுரை- பொள்ளாச்சி - கோவை - பொள்ளாச்சி - மதுரை ரயில் பாதையிலும் குறைந்த பட்சம் 4 ஜோடி பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும். இந்த ரயில்கள் காலையில் பாண்டியன், மைசூர் , முற்பகல் 11 மணிக்கு ராமேசுவரம், செங்கோட்டை, பாலக்காடு - திருச்செந்தூர், மாலை 3 மணிக்கு கோவை- நாகர்கோவில் ரயில்களை மதுரையில் இணைக்கும் வகையிலும், போடியில் இருந்தும் 4 ரயில்களை இயக்கவேண்டும்.'' இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT