Published : 11 Jun 2023 04:57 PM
Last Updated : 11 Jun 2023 04:57 PM
மதுரை: மதுரை கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதி பணியிடம் இரண்டரை ஆண்டுகளாக காலியாக இருப்பதால், மதுரை உள்ளிட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த வங்கி கடன்தாரர்கள் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையின் ஆளுகைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை தவிர்த்து, எஞ்சிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த வங்கிக் கடன் வழக்குகள், மதுரையில் அமைந்துள்ள கடன் வசூல் தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்படுகின்றன. இந்த தீர்ப்பாயம் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இதன் தலைவரை, மத்திய நிதியமைச்சகம் நியமனம் செய்கிறது.
இந்நிலையில், மதுரை கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதி பணியிடம் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால், 11 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன. கோவை கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதி, மதுரை கடன் வசூல் தீர்ப்பாய பொறுப்பு நீதிபதியாக உள்ளார்.
அவர், மதுரை தீர்ப்பாயத்தில் வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழக்குகளை விசாரிக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக மதுரையிலிருந்து வழக்குகள் கோவை தீர்ப்பாயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தேவையில்லாமல் கோவைக்கு அலைய வேண்டியிருக்கிறது.
மேலும் அங்கு விசாரணை முடிந்த பிறகு, வழக்கு ஆவணங்களை திரும்பப் பெறுவதில் கடன்தாரர்கள், வழக்கறிஞர்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு நீதிபதியை நியமிக்கக் கோரி, மதுரை கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர் சங்கம் சார்பிலும், நிலுவையில் உள்ள வழக்குகளை கோவை தீர்ப்பாயத்துக்கு மாற்றக் கோரி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பிலும், உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பாய நீதிபதி நியமனத்துக்கு கெடு விதித்து உத்தரவிட்டனர். இருப்பினும், இதுவரை நீதிபதி நியமிக்கப்படவில்லை. இதற்கு, உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து மதுரை கடன் வசூல் தீர்ப்பாய வழக்கறிஞர்கள் கூறியது: மதுரை தீர்ப்பாய நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதால், வங்கிகளை விட கடன்தாரர்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நியாயமாக கடன் வாங்கி, அதனை கட்ட முடியாமல் சொத்துக்கள் ஏலத்துக்கு வரும் போது, சம்பந்தப்பட்ட கடன்தாரர்கள் உடனடியாக மதுரை தீர்ப்பாயத்தை அணுகி இடைக்கால நிவாரணம் பெற முடியாத நிலை உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வங்கிகள் கடன்தாரர்களின் சொத்துக்களை ஏலத்தில் விட்டு, கடனை நேர் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. இதைத் தவிர்க்க உடனடியாக மதுரை கடன் வசூல் தீர்ப்பாயத்துக்கு நீதிபதி நியமிக்க வேண்டும். அதுவரை கோவை கடன் வசூல் தீர்ப்பாய நீதிபதி மதுரை தீர்ப்பாயத்துக்கு வாரத்துக்கு 2 நாட்கள் நேரில் வந்து விசாரிக்க வேண்டும், இவ்வாறு வழக்கறிஞர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT