Published : 11 Jun 2023 09:00 AM
Last Updated : 11 Jun 2023 09:00 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையை தூர்வாருவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தூர்வாரும் பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடகாட்டில் அமைந்துள்ளது பரப்பலாறு அணை. பாச்சலூர், பன்றிமலை, வடகாடு பகுதியில் உற்பத்தியாகும் நீரோடைகள் சங்கமிக்கும் இடம் தான் இந்த அணை. தமுக்குப் பாறை, தட்டப்பாறை எனும் பிரம்மாண்டமான பாறைகளுக்கு நடுவே பள்ளத்தை நோக்கி பாய்கிறது பரப்பலாறு. அந்த 2 பாறைகளையும் இணைத்து 90 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது பரப்பலாறு அணை.
இந்த அணை ஒட்டன்சத்திரம் நகராட்சியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு திண்டுக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2,000 ஏக்கருக்கு பாசன வசதி அளிக்கிறது. அணை நிரம்பி வெளியேறும் தண்ணீர் நங்காஞ்சியாறு வழியாக சத்திரப்பட்டி, முத்துபூபால சமுத்திரம், பெருமாள் குளம், சடையன்குளம், செங்குளம் ஆகிய குளங்களுக்கு செல்கிறது.
பின்னர் இறுதியாக இடையக்கோட்டை நங்காஞ்சியாறு அணைக்கு செல்கிறது. ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் வசிக்கும் வன விலங்குகளின் தாகம் தணிக்கும் இடமாகவும் பரப்பலாறு அணை விளங்குகிறது. 1975-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை, கடந்த 47 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. நீர்ப்பிடிப்பு பகுதியில் வண்டல் மண், கழிவுகள் சேர்ந்துள்ளதால் அணையின் மொத்த கொள்ளளவை விட குறைவான அளவே தண்ணீரை சேமிக்கும் நிலை உள்ளது.
எனவே, அணையை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையேற்று கடந்த ஆண்டு அணையை தூர்வார ரூ.20 கோடியை அரசு ஒதுக்கியது. அணையை தூர்வாருவதற்கான பூர்வாங்கப் பணிகளை பொதுப் பணித் துறையினர் தொடங்கினர்.
ஆனால் வனப்பகுதியில் இந்த அணை அமைந்துள்ளதால் தூர்வாரும் பணியை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் அனுமதி தேவை. அதற்கான அனுமதி கோரப்பட்டது. இதுவரை 2 கட்ட ஆய்வுகள் நடந்துள்ளன. எனினும், அணையை தூர்வாருவதற்கான அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அணையை தூர்வாரும் பணியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கூறுகையில், அணையை தூர்வாரக் கோரி விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசும் நிதி ஒதுக்கிவிட்டது. ஆனால், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அனுமதி கிடைக்காததால் தூர்வாரும் பணி கிடப்பில் உள்ளது. காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT