Last Updated : 11 Jun, 2023 12:47 PM

 

Published : 11 Jun 2023 12:47 PM
Last Updated : 11 Jun 2023 12:47 PM

கிடப்பில் போடப்பட்ட மீஞ்சூர் ரயில்வே கேட் மேம்பாலம்

இரா.நாகராஜன்

பொன்னேரி: பாதியில் நிற்கும் மீஞ்சூர் ரயில்வே மேம்பாலப் பணி முழுமை பெறாததால் மீஞ்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில்வே மார்க்கத்தில், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே (கேட்) கடவு பாதை உள்ளது. மீஞ்சூர் - காட்டூர் சாலையில் உள்ள இந்த கடவு பாதையை மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் மற்றும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவதானம், கல்பாக்கம், காட்டூர், நெய்தவாயல், வாயலூர், திருவெள்ளைவாயல், ஊரணம்பேடு, தத்தைமஞ்சி, காணியம்பாக்கம், கடப்பாக்கம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

பாதியில் நிற்கும் மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணி.

மருத்துவம், பள்ளி, கல்லூரி, பணியிடங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் மீஞ்சூர், சென்னை உள்ளிட்டபகுதிகளுக்கும் இருசக்கர வாகனங்களிலும் பேருந்துகளிலும் நாள்தோறும் சென்று வருகின்றனர். சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில்வே மார்க்கத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் ஆந்திரா, தெலங்கானா மற்றும் மேற்கு வங்காளம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் விரைவு ரயில்களும் சரக்கு ரயில்களும் சென்று வருகின்றன. இதற்காக அடிக்கடி இந்த கடவுப்பாதை மூடப்படுகிறது.

இதனால் மீஞ்சூர் காட்டூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால்கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலில் அவ்வப்போது 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக்கொள்கின்றன. பொறுமை இல்லாத மக்கள் ஆபத்தை உணராமல் ரயில்வே கேட்டுக்குள் நுழைந்து தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.

இதனால் மீஞ்சூர் ரயில்நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் அமைக்கவேண்டும் என, பொதுமக்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கைவைத்து வந்தனர். அதன் விளைவாக, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையும், தெற்கு ரயில்வேயும் இணைந்து, சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,கடந்த 2014-ம் ஆண்டு மீஞ்சூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, சுமார் ரூ.55 கோடி மதிப்பில் 740 மீட்டர் நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கும் பணி, தொடங்கப்படாமலேயே கிடப்பில் கிடந்தது. பிறகு, 2018-ம் ஆண்டு பணிகள் தொடங்கின. ஆமை வேகத்தில் நடைபெற்ற அப்பணி தற்போது முடிந்தது. அதேநேரத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், ரயில்வே கடவு பாதையின் இருபுறமும் கட்ட வேண்டிய மேம்பால பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தன.

தற்போது, ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியும் முடிவுற்ற நிலையில்,ரயில்வே கேட் பகுதியை இணைக்கும் பாலம் கட்டும் பணி தொடங்கப்படாமல் உள்ளது. இவ்வாறு பாதியில் நிற்கும் பணியால், மீஞ்சூர், அதனை சுற்றியுள்ள 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்டக்குழு உறுப்பினர் கதிர்வேல் கூறும்போது, ‘பலஆண்டுகளாக பொதுமக்கள் வைத்தகோரிக்கையின் விளைவாக தொடங்கப்பட்ட மீஞ்சூர் ரயில்வே மேம்பால அமைக்கும் பணி, நீண்ட காலமாக ஆமை வேகம்,நத்தை வேகம் என நடந்து வந்தது.ரயில்வே கடவு பாதையின் இருபுறமும் உள்ள வீடுகள், கடைகளுக்கு உரிய இழப்பீடு அளித்து நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பாதியில் நிற்கிறது. இது குறித்து, எம்எல்ஏ, எம்.பி.,யிடம்பல முறை கோரிக்கை வைத்தும் பலனில்லை’’ என்றார்.

அரியன்வாயல் பகுதியை சேர்ந்த ஷாயின் ஷா கூறும்போது, “பல ஆண்டுகளாக முடிவுக்கு வராத ரயில்வே மேம்பால பணியால், விபத்தில் படுகாயமடைந்தோர், பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளைகுறித்த நேரத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியாததால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது’’ என்றார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரான ஷேக் அகமது கூறும்போது, “நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள்சென்று வரும் மீஞ்சூர்- காட்டூர் சாலையில்பாதியில் நிற்கும் ரயில்வே மேம்பால பணியால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள், விவசாயிகள், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் குறித்த நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியவில்லை. இப்பிரச்சினைக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரயில்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை இணைக்கும் வகையில், ரயில்வே கேட் பாதையின்இருபுறமும் நெடுஞ்சாலை துறையால் பாலம் அமைக்கும் பணிக்கு தேவையான நிலங்களுக்கு உரிய இழப்பீடு அளித்து நிலத்தை கையகப்படுத்தும் பணி வருவாய்த் துறை அதிகாரிகள் மூலம் நடந்து வருகிறது.

அப்பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. ஆகவே, நெடுஞ்சாலை துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளபணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே, விரைவில், அரசாணை வெளியிடப்படும் என எதிர்பார்க்கிறோம். அரசாணை வெளியான உடன், நெடுஞ்சாலை துறை சார்பில் ரயில்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை இணைத்து பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x