Published : 11 Jun 2023 12:34 PM
Last Updated : 11 Jun 2023 12:34 PM

ஓய்வூதியதாரர்கள் தொடர்பான புதிய அரசாணைக்கு எதிர்ப்பு - உடனே ரத்து செய்ய ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஓ.பன்னீர் செல்வம் | கோப்புப் படம்

சென்னை: ஓய்வூதியதாரர்களின் உயிர்வாழ் சான்றிதழ் குறித்த புதிய அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "தமிழக அரசு மற்றும் ஆசிரியர் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வுகாலப் பயன்களை விரைந்து வழங்குவது, அவர்களுக்கான ஓய்வூதியத்தை மாதந்தோறும் வழங்குவது, அவர்களுடைய குறைகளை தீர்ப்பது ஆகியவை தமிழக அரசின் கடமையாகும். இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கென ஓய்வூதிய இயக்குநரகம் செயல்பட்டு வருகிறது.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கான ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறும் வகையில், அவர்கள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழை ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களுக்குச் சென்று சமர்ப்பிக்க வேண்டுமென்ற நடைமுறை வழக்கத்தில் இருந்து வந்தது. ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், வெயில் காரணமாக வெளியில் வரமுடியாத ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கும் வகையில் அரசாணை எண் 215 நாள் 26-03-2020 நிதி (ஓய்வூதியம்) துறை மூலம் வெளியிடப்பட்டது.

இதன்படி, கருவூலத் துறை அலுவலங்களுக்கு நேரில் சென்றோ அல்லது அஞ்சல் துறை மூலமாகவோ அல்லது மின்சேவை மையம் மூலமாகவோ அல்லது ஓய்வூதியதாரர்கள் சங்கம் மூலமாகவோ ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து ஒய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்தை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பது தொடர்பாக நிதி (ஓய்வூதியம்) துறையால் அரசாணை எண் 165 நாள் 31-05-2023 வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய உயிர்வாழ் சான்றிதழை அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வு பெற்றார்களோ அந்த மாதத்தில் வழங்க வேண்டுமென்றும், ஒரு மாதம் சலுகைக் காலம் வழங்கப்படும் என்றும், இது விடுதலைப் போராட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் பயன்பெறுபவர்களுக்கும் பொருந்தும் என்றும், இதனை உரிய காலத்தில் மேற்கொள்ளவில்லை என்றால், ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த அரசாணையில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியவர்கள் சிறப்பு நேர்வாக ஜூலை மாதத்தில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், முந்தைய ஆண்டுகளில் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஓய்வு பெற்றவர்கள் எப்போது உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. இந்த அரசாணை ஒரு தெளிவற்றதாக இருக்கிறது. இந்த அரசாணை ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்கள் மகன், மகளுடன் தங்கள் சொந்த ஊர்களிலும், வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் வசித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் மருத்துவ சிகிச்சையையும் பெற்று வருகிறார்கள். மேலும், கோடை வெயிலின் தாக்கம் முடிந்து, ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் மாதத்திற்குள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிப்பதுதான் எளிதானது என்றும், இந்த முறை தொடர வேண்டுமென்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு துறை ஓய்வூதியதாரர்கள் சங்கம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, உயிர்வாழ் சான்றிதழ் தொடர்பான 31-05-2023 நாளிட்ட நிதித் துறை அரசாணை எண். 165-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும், இதுகுறித்து ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் கருத்தினைக் கேட்டு அதன் அடிப்படையில் செயல்பட வேண்டுமென்றும் முதல்வர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x