Published : 11 Jun 2023 06:05 AM
Last Updated : 11 Jun 2023 06:05 AM

மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தார் - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சென்னை/வேலூர்: வேலூரில் இன்று நடைபெற உள்ள பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

இதையொட்டி, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் இன்று (ஜூன் 11) பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார்.

உற்சாக வரவேற்பு: இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 9.20 மணியளவில் சென்னை வந்த அமித் ஷாவை, விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிட இணைபொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, எச்.ராஜா, எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் உற்சாகவரவேற்பு அளித்தனர். விமானநிலையத்தில் இருந்து வெளியேவந்த அமித் ஷா, சிறிது தூரம் நடந்து சென்று தொண்டர்களை சந்தித்தார். பின்னர் காரில் ஏறி கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். அங்கு கூட்டணிக் கட்சிப்பிரதிநிதிகளை அவர் சந்தித்துப் பேசினார்.

மேலும், 24 முக்கியப் பிரமுகர்களை அமித் ஷா சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து, தென் சென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பு நிர்வாகிகளுடன் கோவிலம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராணி மஹாலில் காலை 11 மணியளவில் அவர் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், கிண்டி நட்சத்திர விடுதியில் மதிய உணவை முடித்துவிட்டு காரில் விமான நிலையம் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக வேலூர் செல்கிறார்.

வேலூர் மாவட்டம் கந்தனேரியில் பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித் ஷா சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை தலைமை வகிக்கிறார். வேலூர் மாவட்டத் தலைவர் மனோகரன் வரவேற்கிறார்.

முன்னதாக, சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வரும் அமித் ஷா, அங்கிருந்து கார் மூலம் பொதுக்கூட்ட மைதானத்துக்கு வருகிறார்.

பொதுக்கூட்டத்தில் மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், மத்திய தகவல் தொடர்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மீண்டும் கார் மூலம் அப்துல்லாபுரத்தில் உள்ள விமான நிலையம் செல்லும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை திரும்புகிறார்.

அமித் ஷா வருகையை முன்னிட்டு, ஐ.ஜி. கண்ணன், வேலூர் சரக டிஜஜி முத்துசாமி ஆகியோர் மேற்பார்வையில், 6 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 1,200 காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையினர் என சுமார் 1,400 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பள்ளிகொண்டா, கந்தனேரி பகுதிகளில் ட்ரோன்கள், ராட்சத பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமித் ஷா விமான நிலையத்து வெளியே வந்தபோது மின் தடை ஏற்பட்டது. இதைக் கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x