Published : 11 Jun 2023 08:53 AM
Last Updated : 11 Jun 2023 08:53 AM
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்க சிலர் பணம் வசூலிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென டீன் நிர்மலா தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் கூறியதாவது: மருத்துவப் படிப்பு முடித்தபின் ஒவ்வொருவரும் ஓராண்டு காது, மூக்கு, தொண்டை, மகப்பேறு, எலும்பு முறிவு சிகிச்சை, மருந்தியல், சோசியல் மற்றும் பிரிவென்டிவ் மெடிசன் என்பன உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்ற வேண்டும்.
பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் பெற ஒவ்வொரு துறை பேராசிரியர்களிடமும் கையெழுத்து பெற வேண்டும். இத்தகைய முயற்சி மேற்கொள்ளும் போது சிலர், எங்களிடம் பணம் கேட்கின்றனர். இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறும்போது, ‘‘நானும் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றிய பின்புதான் டீனாக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறேன். பேராசிரியர்கள் எக்காரணம் கொண்டும் பயிற்சி மருத்துவர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள், என்னிடம் நேரில் புகார் தெரிவித்திருக்கலாம். இதுவரை எனக்கு இப்பிரச்சினை குறித்து தகவல் வரவில்லை. விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT