Last Updated : 11 Jun, 2023 10:03 AM

1  

Published : 11 Jun 2023 10:03 AM
Last Updated : 11 Jun 2023 10:03 AM

திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட சூளகிரி வேளாண் விரிவாக்க மையம்: குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அவதி

சூளகிரியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தில் புகுந்த கழிவுநீருடன், மழைநீரில் நனைந்து வீணாகிய மருந்துகள். (அடுத்தபடம்) நெல் மூட்டை நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளன.

கிருஷ்ணகிரி: சூளகிரியில் உரிய திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்ட, ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் குளம் போல் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் வீசுவதால், அலுவலர்கள், விவசாயிகள் அவதியுடன் வந்து செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் காவல் நிலையம் அருகே, வேளாண்மைத்துறை சார்பில் ரூ.1.75 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், அதன் அருகே சேமிப்பு கிடங்கு ஆகியன கட்டப்பட்டுள்ளன. இக்கட்டிடங்கள் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு வந்தன.

இந்த கட்டிடம், உரிய திட்டமிடல் இல்லாமல், தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளதால், அதன் அருகே சாக்கடை கால்வாயில் இருந்து கசிந்து வழிந்தோடி வரும் கழிவுநீர் முழுவதும், குளம் போல் தேங்கி உள்ளது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், கழிவுநீரும், மழைநீரும் அலுவலகத்தின் உள்ளே புகுந்ததில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல், ராகி மருந்துகள் உள்ளிட்டவை பயனற்று போனதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சூளகிரி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜ் கூறும்போது, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண்மை அலுவலகம் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. அங்கு போதிய இடவசதி இல்லாததால், புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடம் மிகவும் தாழ்வாக இருந்ததை சரியாக சீரமைக்காமல், சமன்படுத்தாமல் அவசரகதியில் கட்டிடத்தை கட்டி முடித்தனர்.

இதனால் பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களில் அலுவலகம் முடங்கியது, மீண்டும் பழைய இடத்திலேயே செயல்படுகிறது. தற்போது, இந்த அலுவலக வளாகத்தில் கழிவுநீரும், மழைநீரும் தேங்கி புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, துர்நாற்றமும் வீசுகிறது.

மேலும், சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது அலுவலகத்தின் உள்ளே புகுந்த கழிவுநீர் கலந்த மழைநீரால் ராகி, நெல் மூட்டைகள் நனைந்து, முளைத்துள்ளன. எனவே, வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட வளாகத்தில் கழிவுநீர் உள்ளே வராமல் தடுக்கவும், மழைநீர் தேங்காதபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x