Published : 31 Oct 2017 11:06 AM
Last Updated : 31 Oct 2017 11:06 AM
தமிழ்நாட்டில் இந்தாண்டு கோடை மழையும், தென்மேற்குப் பருவமழையும் பரவலாக நன்றாகப் பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 5.5 அடி உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச மாக தேனி மாவட்டத்தில் 1.27 அடி உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி இந்தாண்டு நிலவியது. பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங்களில் கோடை மழையும், தென்மேற்குப் பருவமழையும் மாநிலத்தில் பரவலாக நன்றாகப் பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
தமிழ்நாட்டில் 73 சதவீதம் பாறைப் பகுதிகளும், 23 சதவீதம் வண்டல் (Sedimentary) மண் பகுதிகளும் உள்ளன. இதன்காரண மாக பாறைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்வதில்லை. ஆனால், நீர்மட்டம் உயர்ந்துவிட்டால் அவ்வளவு எளிதாக குறைவதும் கிடையாது. வண்டல் மண் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயரும். அதுபோல வேகமாக குறையவும் செய்யும்.
தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்படும் 4,250 ஆய்வுக் கிணறுகள் (Observation Wells) மழைமானிகள் மூலமாக கணக் கிடப்படுகிறது. இதற்காக மனித னால் இயக்கப்படும் கருவிகள், தானியங்கி கருவிகள், நவீன தொழில்நுட்ப கருவிகள் பயன் படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 1 முதல் 7-ம் தேதிக்குள் ஆய்வுக் கிணறுகள் மற்றும் மழைமானியில் உள்ள தேங்கியுள்ள நீரைக் கொண்டு நிலத்தடி நீர்மட்டம் கணக்கிடப்படுகிறது.
இதுகுறித்து நிலநீர் பிரிவின் உயர் அதிகாரி கூறியதாவது: தமிழ்நாட்டில் நிலவிய கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்தபடி உயரவில்லை. கடந்தாண்டு அக்டோபர் மாதத்துடன் இந்தாண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில் திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய 9 மாவட்டங்களில் மட்டும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சென்னை உட்பட 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைவாகவே காணப்படுகிறது.
ஆண்டு சராசரியின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 5.5 அடி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறைந்தபட்சமாக தேனி மாவட்டத்தில் 1.27 அடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. தஞ்சாவூரில் 3.18 அடி, திருவாரூரில் 4.16 அடி, கரூரில் 5.47 அடி, பெரம்பலூரில் 0.29 அடி, புதுக்கோட்டையில் 0.16 அடி, நாமக்கல்லில் ஒரு அடி, திண்டுக்கல் மாவட்டத்தில் 1.67 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
அதேநேரத்தில் அண்மையில் பலத்த மழை பெய்ததால் செப்டம்பர் மாதத்தைவிட அக்டோபர் மாதத்தில் 28 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 8 அடியும், சேலம் மாவட்டத்தில் 7 அடியும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச மாக சென்னையில் 0.16 அடி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. ஆண்டு சராசரியில் 6 அடிக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்த சென்னையில் கடந்த மாதத்துடன் இந்த மாதத்தின் சரா சரியை ஒப்பிடும்போது 0.16 அடி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT