Published : 13 Oct 2017 02:17 PM
Last Updated : 13 Oct 2017 02:17 PM
நாய்களைக் கொடுமைப்படுத்தியதாகவும் கொன்றதாகவும் தனியார் பல்கலைக்கழகதின் மீதும், தாம்பரம் நகராட்சி மீதும் ப்ளூ கிராஸ் பொது மேலாளர், தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர்-கேளம்பாக்கம் பிரதான சாலை மேலைக்கோட்டையூர் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தினுள் 11 நாய்களை நகராட்சி ஊழியர்கள் அராஜகமாக, துன்புறுத்தி பிடித்துச் சென்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள், செய்தி பரவியது.
இதைப் பார்த்த மத்திய அமைச்சர் மேனகா காந்தி சென்னை வேளச்சேரியில் உள்ள ப்ளூ கிராஸ் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ்க்கு மெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ப்ளூ கிராஸ் பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் தாம்பரம் நகராட்சிக்கு சென்று நகராட்சி உதவி ஆய்வாளரிடம் விசாரணை நடத்தினார். நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தை இரண்டு ஊழியர்கள் எடுத்துக்கொண்டு தாம்பரம் நகராட்சி எல்லைக்குட்படாத மேலைக்கோட்டையூரில் அத்துமீறி சென்று தனியார் பல்கலைகழகத்திற்குள் புகுந்து 11 நாய்களைத் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி பிடித்துச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
கருப்பு நிற நாய் ஒன்றை கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வது வீடியோவில் வைரலானது. அந்த நாய் பின்னர் இறந்துவிட்டதாக கூறப்பட்டது. மேலும் பிடித்துச் செல்லப்பட்ட 10 நாய்களின் நிலைமை என்னவானது என்பதும் தெரியவில்லை.
இது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பு நகராட்சி ஊழியர்கள் சுந்தரம், தேவா மற்றும் விஐடி பல்கலைக்கழகம் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் விலங்கு நல ஆர்வலர்கள் சார்பிலும் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பு டான் வில்லியம்சிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
கடந்த 8 ஆம் தேதி என்ன நடந்தது?
தாம்பரம் நகராட்சியைச் சேர்ந்தவர்கள் கடந்த 8-ம் தேதி அதில் உள்ள சில ஊழியர்கள் விஐடிக்கு சென்று 11 நாய்களை பிடித்துள்ளனர். கொடூரமாக பிடித்து இழுத்துச் சென்றுள்ளனர். அதில் ஒரு நாய் இறந்து விட்டது என்கிறார்கள்.
நாயை இது போல் பிடிக்க தடை இருக்கிறது அல்லவா?
நாயை பிடிக்கலாம். அதைப் பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து அங்கேயே விடலாம். வதைக்கக் கூடாது, கொல்லக் கூடாது. தமிழ்நாடு அரசுதான் உலகத்திலேயே முதல்முறையாக 1996-ல் நல்ல முடிவை எடுத்தாங்க.
நாய்களை இது போன்று கொல்லக் கூடாது பிடித்து கருத்தடை செய்யலாம் என்று முடிவெடுத்து செய்தது தமிழக அரசு. இது சக்சஸ் ஆனது.
இந்த சம்பவம் நடந்த அந்த தனியார் பல்கலைக்கழகம் நேர்மையாக சட்டரீதியாக சரியாக செய்யாமல் இது போன்று சட்டவிரோதமாக சிலரை அழைத்து இதுபோன்று வதைத்து நாயை பிடித்துள்ளனர்.
அதில் ஒரு நாய் இறந்துபோனது என்று சொல்கிறார்கள். நம்ம ஊர் இளைஞர்கள் இதில் விழிப்புணர்வு மிக்கவர்கள் உடனடியாக அதை காட்சிப்படுத்தி வைரலாக்கியதால்தான் தெரியவந்தது.
மொத்தம் எத்தனை நாய்கள் பிடிக்கப்பட்டது?
அவர்கள் பிடித்ததாக மாணவர்கள் சொன்னது, மொத்தம் 11 நாய்கள் பிடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். நாய் பிடிக்கிறவர்கள் தாம்பரம் நகராட்சியை சேர்ந்தவர்கள், அவர்கள் எல்லையை தாண்டி போய் பிடித்துள்ளனர். அதுவுமில்லாமல் ஒரு தனியார் கல்லூரிக்கு ஆதரவாக போய் பிடித்துள்ளனர். நாயை பிடித்து என்ன செய்தார்கள் என்பது மர்மமாக உள்ளது.
நாய்கள் இப்போது எங்கே இருக்கிறது?
தெரியவில்லை, எங்கே இருக்கிறது என்பதே மர்மமாக இருக்கிறது. என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. நாயை பிடித்து கொன்றார்கள் என்றால் குற்றம். நாயை பிடித்து வேறு இடத்தில் விட்டாலும் குற்றம். இங்கு பிறந்து வளர்ந்த நாய்கள் யாரையும் கடிக்காது, ஆனால் புதிய இடத்தில் அந்த நாய்கள் எதாவது குழந்தைகளை கடித்து வைத்தால் யார் பொறுப்பு.
இதற்கு என்று அதிகாரிகள் இருப்பார்களே அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
நாங்கள் சென்று பேசினோம், அங்குள்ள அதிகாரிகளுக்கு இப்படி ஒன்று நடந்தது என்றே தெரியவில்லை. வண்டி நகராட்சி வண்டி. இந்த ஊழியர்களை அனுப்பியது கருத்தடை செய்யும் டாக்டராக இருக்கலாம், அல்லது நகராட்சி அதிகாரிகள் யாராவது இருக்கலாம்.
இதற்கென்று உள்ள அதிகாரி யாராவது இருப்பார்கள் அல்லவா?
இருக்கிறார், தாம்பரம் சுகாதார அலுவலரைச் சென்று பார்த்தோம். அவர் முழிக்கிறார். யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்கிறார்கள். இதை தாம்பரம் நகராட்சித்தான் விசாரிக்கணும். இது பெரிய விவகாரம் அதனால் போலீஸில் புகார் அளித்துள்ளோம்.
இதற்கு சட்ட ரீதியாக என்ன பிரிவின் கீழ் தண்டனை உண்டு?
இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 428, 429 கீழ் வரும், மிருக வதை தடுப்புச்சட்டம் 1960-ன் கீழ் வரும் மற்றும் நாயை எங்கேயாவது கொண்டு போய் விட்டிருந்தால் பொதுமக்களுக்கு இடையூறு செய்வது சட்டத்தின் கீழ் வரும்.
காவல்துறை என்ன சொல்கிறார்கள்?
போலீஸார் எப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள் விசாரித்து வருகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT