Published : 05 Oct 2017 07:20 PM
Last Updated : 05 Oct 2017 07:20 PM
எழும்பூர், புதுப்பேட்டை போன்ற இடங்களில் பல ஆண்டுகளாக ஓரங்கட்டி நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களில் தேங்கும் மழை நீர் காரணமாக டெங்கு கொசுப்பண்ணைகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டது மண்டலம் 5-ல் தான். மண்டலம் 5 ல் உள்ள புதுப்பேட்டை, எழும்பூர் ராஜரத்தினம் சாலை பின்புறம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு உள்ளது. இங்குதான் அதிக அளவில் டெங்கு பாதிக்கப்பட்ட காவலர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வெளியூரிலிருந்து இங்கு வந்து தங்கியுள்ள ஆயுதப்படை காவலர்கள் அதிக அளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகினர். இதற்கு காரணம் ஆயுதப்படை குடியிருப்பு அருகே ஆண்டுக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ள பழைய வாகனங்களே. இந்த வாகனங்களில் மழைக்காலத்தில் தேங்கும் தூய மழை நீரில் ஏடிஎஸ் கொசுக்கள் வளருகின்றன.
இதே போல் பழைய கமிஷனர் அலுவலகம் மற்றும் நரியங்காடு காவலர் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உபயோகமற்று போன மற்றும் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஆண்டுக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களிலும் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்பண்ணையாக அது மாறி வருகிறது. உடனடியாக அந்த வாகனங்களை அகற்ற வேண்டும் என்பது காவலர் குடும்பங்களின் கோரிக்கையாக உள்ளது.
இதே போல் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பு, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு மற்றும் சென்னையில் உள்ள பெரும்பாலான காவலர் குடியிருப்புகள் மோசமான பராமரிப்பு காரணமாக சுகாதாரமற்று உள்ளன.
சமீபத்தில் கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஒருவரின் 7 வயது மகன் டெங்கு காய்ச்சலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT