Published : 11 Jun 2023 01:09 AM
Last Updated : 11 Jun 2023 01:09 AM

அமித் ஷா வருகையின்போது திடீர் மின்தடை ஏன்?: சென்னை விமான நிலையத்தில் பாஜக மறியல்

சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷா சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையம் அவர் வந்த சமயத்தில் அங்கு மின்தடை ஏற்பட்டதை அடுத்து பாஜக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே 30-ம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை பாஜகநடத்தி வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்த பாஜக நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் இன்று (ஜூன் 11) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நேற்றிரவு அமித் ஷா சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையம் வந்த அவரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் ஹெச்.ராஜா, கரு.நாகராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இரவு 9:35 மணிக்கு, விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய அமித் ஷா காரில், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். செல்லும் வழியில் சாலையோரம் பா.ஜ., தொண்டர்கள் திரண்டு நின்று, அவருக்கு வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். பதிலுக்கு அமித் ஷா, தனது காரில் இருந்து கீழே இறங்கி, தொண்டர்களை பார்த்து கை அசைத்து, சிறிது துாரம் நடந்து சென்று வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பகுதிக்கு அமித் ஷா கார் வந்ததும், அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அமித் ஷா, விமான நிலையத்திற்கு வெளியே சாலையில் நடந்து சென்று, தொண்டர்களின் வரவேற்பை ஏற்ற சமயத்தில் சாலை மின் விளக்குகள் அணைத்தன. இந்த மின்தடை சில நிமிடங்களுக்கு மேல் நீடித்ததால் அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் கோபமடைந்தார். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சில நிமிடங்கள் பரபரப்பானது.

அமித் ஷாவின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மின்தடை நிகழ்த்தப்பட்டதாக பாஜக தொண்டர்கள் குற்றம் சுமத்தினர். "மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது திடீரென எப்படி மின்தடை ஏற்படும்? இது ஒரு பாதுகாப்பு குறைபாடு. இதை தீவிரமாக விசாரிக்க வேண்டும்" என்று கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

மின்தடைக்கு விளக்கம் அளித்துள்ள மின்வாரியம், "போரூர், பரங்கிமலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டது" என்று தெரிவித்துள்ளது.

இதேபோல், மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி அளித்துள்ள பேட்டியில், "காற்று மற்றும் மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டிருக்கலாம். விவிஐபிக்கள் வரும்போது 24 மணிநேரமும் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள், மேலும் பல்வேறு வழிமுறைகளை நாங்கள் அந்த சமயத்தில் பின்பற்றுவோம். போரூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் கொண்டு செல்லும் லைனில் திடீர் துண்டிப்பினால் இன்று மின்தடை ஏற்பட்டது" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x