Published : 10 Jun 2023 06:00 PM
Last Updated : 10 Jun 2023 06:00 PM
சென்னை: "தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய பாஜக அமைச்சர் கிரிராஜ் சிங் வெள்ளிக்கிழமை பிஹாரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, “நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர். அவர் பாபர், அவுரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், அவுரங்கசீப் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.
பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே இந்துத்துவ சனாதன சக்திகள் மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சே மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சாவர்க்கர் போன்றோரை புகழ்ந்து பேசுவது கடும் கண்டனத்துக்கு உரியது. தேசப் பிதா மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேயைப் புகழ்ந்து பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும். உடனடியாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, கிரிராஜ் சிங் இரண்டு நாட்கள் பயணமாக பிஹார் சென்றார். கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை மாலை அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சில விஷயங்கள்தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது என்ன? - "நாதுராம் கோட்சே இந்தியாவின் மரியாதைக்குரிய நபர். அவர் பாபர், அவுரங்கசீப் போன்ற முகலாயர்கள் போல் படையெடுத்து வந்தவர் அல்ல. ஆகையால் தங்களை பாபர், அவுரங்கசீபின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்பவர்கள் நிச்சயமாக பாரத அன்னையின் மகனாக இருக்க இயலாது" என்று பேசியது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT