Published : 10 Jun 2023 04:51 PM
Last Updated : 10 Jun 2023 04:51 PM
சென்னை: பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமன நடைமுறைக்கு கால நிர்ணயம் செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மாற்றம் இந்தியா அமைப்பின் சார்பில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்துக்கு கால நிர்ணயம் செய்து விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், "பல்கலைக்கழக மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும். பல்கலைக்கழக செயல்பாடுகளில் இடையூறு ஏற்படாமலும் தடுக்க வேண்டும். இதற்காக, துணை வேந்தர்கள் நியமன நடைமுறைகளை உடனுக்குடன் முடிக்கும் வகையில் கால நிர்ணயம் செய்து விதிமுறைகளை வகுக்க வேண்டும்" என மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்திருந்தது. அதில், "துணை வேந்தர்கள் தேர்வு நடைமுறைகளை எப்போது துவங்குவது, எப்போது முடிப்பது என்பது குறித்து கால நிர்ணயம் செய்து தமிழ்நாடு பல்கலைக்கழகத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, "கடந்த ஆண்டு, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டம், சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT