Published : 10 Jun 2023 04:41 PM
Last Updated : 10 Jun 2023 04:41 PM
புதுச்சேரி: “ஆளுநர் என்பவர் தனிப்பட்ட நபரல்ல; அவர் மத்திய அரசால் எய்யப்படும் அம்புதான்” என்று விழுப்புரம் ரவிக்குமார் எம்.பி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக வைத்திலிங்கம் எம்பி நியமிக்கப்படவுள்ளார். இந்நிலையில், அவரை புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், விழுப்புரம் எம்.பியுமான ரவிக்குமார் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: "கர்நாடகாவில் எந்தக் கட்சியின் ஆட்சி அமைந்தாலும் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் என்றே கூறி வருகின்றனர். ஆனால், அணையைக் கட்டமுடியாது என்பதுதான் உண்மையான நிலையாகும்.
காவிரி அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழகத்துக்கு சாதகமாகவே உள்ளது. தமிழகத்திலும் காவிரி பிரச்சினையை முழுமையாக அறிந்த மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளார். ஆகவே, அணை விவகாரத்தில் அரசு முழுமையாக நமது உரிமையை காக்கும் வகையில் செயல்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளும் திமுகவினால் நேரடியாக விமரிசிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் என்பவர் தனிப்பட்ட நபரல்ல. அவர் மத்திய அரசால் எய்யப்படும் அம்புதான். அவரது செயல்பாட்டுக்கு மத்திய அரசே காரணமாகிறது. ஆதலால் எய்தவர் இருக்க அம்பை நொந்து பயன் கிடையாது.
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்காமல் செயல்படுகிறார். ஆகவேதான் மத்திய அரசு ஆளுநர்களை அரசியல்வாதிகளைப் போல கருவிகளாகப் பயன்படுத்துகிறது என்கிறோம்.
அரசியல் சாசனப்படி செயல்படும் தேர்தல் ஆணையம் உள்ளிட்டவற்றின் தனித்தன்மையை அழித்துவிட்டு மத்திய அரசு பயன்படுத்தும் கருவியாக அவற்றை மாற்றுவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT