Published : 09 Oct 2017 07:24 PM
Last Updated : 09 Oct 2017 07:24 PM

புறக்கணிப்பை கடந்து வந்த ப்ரித்திகா யாஷினி: இந்தியாவின் முதல் திருநங்கை எஸ்.ஐ. ஆனார்

புறக்கணிப்பையே புறக்கணித்து சோர்வில்லாமல் முன்னேறி இந்தியாவின் முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்ற சாதனையுடன் சூளைமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் பணியை ஏற்றுக்கொண்டார் ப்ரித்திகா யாஷினி.

இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற பெருமையுடன் தனது போலீஸ் பயிற்சியை முழுவதுமாக நிறைவு செய்த திருநங்கை ப்ரித்திகா யாஷினி சூளைமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.

சேலம் கந்தம்பட்டியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் கலையரசன், சுமதி தம்பதியின் இளைய மகனாக பிறந்தவர் ப்ரித்திகா யாஷினி(25). சேலம் பழைய சூரமங்கலத்தில் உள்ள நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துவிட்டு, சேலம் அரசு கலைக்கல்லூரியில் பிசிஏ பட்டப்படிப்பை முடித்தவர் பிரித்திகா. 10-ம் வகுப்பு படித்தபோது, உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்பட்ட பாலின மாற்றத்தை கண்டறிந்து, திருநங்கையாக உருமாறிய ப்ரித்திகா கல்லூரி படிப்பின் மூன்றாம் ஆண்டு வரை தனது நிலையை தனது தாயிடம் கூட கூறவில்லை.

அதன் பின்னர் தான் திருநங்கையாக மாறியதை ப்ரித்திகா கூற அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். சென்னை வந்த ப்ரித்திகா திருநங்கை பானுவின் உதவியுடன் நாட்களை நகர்த்தினார். பின்னர் கிடைத்த வேலையை செய்தவர் நர்சிங் ஹோம் ஒன்றில் பணிகிடைக்க வாழ்க்கையை தள்ள ஆரம்பித்தார். ப்ரித்திகா சந்தித்தது அனைத்தும் புறக்கணிப்பும் அவமானமும் தான்.

அவரது நிலையை அறிந்து அவரை ஏற்றுக்கொண்டது அவரைப் போன்ற புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகள்தான். தனக்கு ஏற்பட்ட நிலையை மாற்ற நினைத்த ப்ரித்திகா தன் லட்சியமான காவல்துறையில் இணைய வேண்டும் என்பதை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு ஆறுதல் தரும் செய்தியாக திருநங்கைகளுக்கான இட ஒதுக்கீடும் மூன்றாம் பாலினமாக அங்கீகரிக்கும் தீர்ப்பும் வந்தது.

தன் லட்சியப்படி உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பித்த அன்றிலிருந்து சூளைமேடு காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்றது வரை ப்ரித்திகா சந்தித்த இடையூறுகள் புறக்கணிப்புகளை பல நல்ல உள்ளங்களின் பங்களிப்புடன் தனது மன உறுதியுடன் வென்றுள்ளார். எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை வரை பல்வேறு இடைஞ்சல்களை அவர் சந்திக்க நேரிட்டது.

வழக்கமாக உள்ள ஆணாதிக்கத்தையும் தாண்டி திருநங்கை என்ற பார்வை ப்ரித்திகாவுக்கு உதவுவதற்கு பதில் தடை போட்டவர்களே அதிகம். தன்னம்பிக்கையுடன் நீதிமன்றக் கதவுகளை தட்டினார் ப்ரித்திகா. எஸ்.ஐ. தேர்வுக்கான விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்துக்கான பிரிவு இல்லாததால் பெண் பிரிவில் கலந்துகொண்டு, வெற்றி பெற்றார்.

பிப்ரவரி மாதம் காவல் துறையில் துணை ஆய்வாளர் தேர்விற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்கப்படாத நிலையில் நீதிமன்றம் சென்றார். பின்னர் மே மாதம் எழுதிய தேர்விற்கான முடிவுகள் ஜூலை மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஜாதி, ஆண் பெண், சமூகம், துறை ரீதியாக என பல்வேறு நிலைகளின் கீழ் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் ப்ரித்திகாவுக்கு எந்த கட் -ஆப் மதிப்பெண்ணும் வரையறுக்கப்படவில்லை. மீண்டும் நீதிமன்றம் சென்றார். இவை அனைத்துக்கும் உறுதுணையாக இருந்து வாதாடியது தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் பவானி சுப்ரமணியம். அன்று ப்ரித்திகாவுக்காக நீதிமன்ற கதவை ஒவ்வொரு தடவையும் தட்டிய வழக்கறிஞர்.

அனைத்து நிலைகளிலும் தேர்ச்சி பெற்ற ப்ரித்திகாவுக்கு கடைசியாக பெரிய தடையை  காவல்துறை அதிகாரிகள் விதித்தனர். உடல் தகுதித் தேர்வில் நானூறு மீட்டார் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கைப்பந்து என எல்லா தேர்வுகளை கடந்து நூறு மீட்டார் ஓட்டப்பந்தயத்தில் ஒரு வினாடி தாமதமாக வந்ததால் நிராகரிக்கப்பட்டார். மீண்டும் நீதிமன்றம் வரை சென்ற ப்ரித்திகாவுக்கு நீதிபதி மகாதேவன் வழங்கிய தீர்ப்பு திருநங்கைகள் சமூகத்திற்கு பெரிய அங்கீகாரமாக வந்த தீர்ப்பு.

அதன் பின்னர் உதவி ஆய்வாளர் பயிற்சி முடித்து சிறிது காலம் சிறப்பு உதவி ஆய்வாளராக தருமபுரியில் பணியாற்றிய ப்ரித்திகா தனது முழுப்பயிற்சியையும் நிறைவு செய்து சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக இந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளர் என்ற பெருமையுடன் சூளைமேடு காவல் நிலையத்தில் தனக்கான பணியில் இன்று இணைந்தார். சூளை மேடு காவல் நிலையத்துக்கு சென்ற அவரை ஆய்வாளர் வாழ்த்தி வரவேற்றார். பின்னர் முறைப்படி சார்ஜ் எடுத்துக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x