Published : 10 Jun 2023 12:39 PM
Last Updated : 10 Jun 2023 12:39 PM
சென்னை: விபத்துகளை குறைக்க சாலையில் பூசணிக்காய் உடைத்த போலீஸ் தொடர்பாக வீடியோ வைரல் ஆன நிலையில், அறிவியலை மட்டுமே நம்புவதாக சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மதுரவாயல், வானகரம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க மதுரவாயல் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் காவலர் சிலருடன் திருநங்கை ஒருவரை காவல் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களில் பூசணிக்காய் மற்றும் எலுமிச்சை பழத்தைக் கொண்டு திருஷ்டி சுற்றியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது குறித்து சென்னை காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், "இது ஒரு தனிப்பட்ட அதிகாரி, தனது தனிப்பட்ட நம்பிக்கையின் நீட்சியால் செய்த நல்ல நோக்கம் கொண்ட, ஆனால் முற்றிலும் தவிர்க்கக் கூடிய செயலாகும்.
அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தையை வேறுபடுத்திப் பார்க்க ஒரு கணம் தவறிவிட்டார். சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பகுத்தறிவு, அறிவியல் பகுப்பாய்வு, விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் விபத்து தடுப்பு முன்னேற்பாடுகள் பற்றிய ஆய்வை மட்டுமே நம்புகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரி பணியில் இருந்து விலக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறைக்கு அறிக்கை செய்துள்ளார்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT