Published : 10 Jun 2023 11:08 AM
Last Updated : 10 Jun 2023 11:08 AM
சென்னை: தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க முடியாதது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய அளவில் கிரிக்கெட், டென்னிஸ், நீச்சல், கேரம், சதுரங்கம், ஹாக்கி, கபடி உள்ளிட்ட 32 விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இவற்றில் மாநில அளவிலான போட்டிகளில் தகுதி பெற்றவர்களை தேசிய போட்டிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் தேர்வு செய்து அனுப்புகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மற்றும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கையில் முன்னுரிமை உட்பட பல்வேறு சலுகை வழங்கப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தேசிய போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றவர்களின் விவரங்களை மே 29-ம் தேதிக்குள் இணையவழியில் பதிவு செய்ய தேசிய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்து அனுப்ப பள்ளிக்கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதனால் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் இதற்கு கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான கேள்விக்கு சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர்," இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையாக தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் இது நடந்துள்ளது. இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். " இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT