Published : 10 Jun 2023 04:11 AM
Last Updated : 10 Jun 2023 04:11 AM
சென்னை: உரிமம் பெறாமல் வைக்கப்பட்ட விளம்பர பலகை, பேனர், பதாகைகளை உடனடியாக அகற்றாவிட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 ஆண்டு சிறை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம், திருத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் ஆகியவற்றின்கீழ் உருவாக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின்படி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் விளம்பர பலகை, பேனர்கள், பதாகைகளை நிறுவக்கூடாது. இந்த சட்டம் கடந்த ஏப்.13 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. உரிமம் பெறாமல் ஏற்கெனவே வைத்திருந்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். உரிமக்காலம் முடிந்த பிறகும் வைத்திருக்கும் பேனர், பதாகைகளையும் உடனே அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அவற்றை அகற்றும். அந்தந்த நிறுவனங்கள் அல்லது தனி நபர்களிடம் இருந்து அதற்கான செலவினம் வசூலிக்கப்படும். இந்த விதிகளை மீறி செயல்படும் நிறுவனம், தனி நபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
அனுமதியின்றி புதிதாக வைத்தால்..: உரிய அனுமதி பெறாமல் பேனர்கள், பதாகைகளை அமைக்கும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
வரையறுக்கப்பட்ட இடங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட அளவுகளில் மட்டுமே விளம்பர பலகை, பேனர் வைக்க வேண்டும். இவற்றால் விபத்துநடந்து, மக்கள் காயமடைந்தாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ, இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு. அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT