Published : 10 Jun 2023 05:43 AM
Last Updated : 10 Jun 2023 05:43 AM
சென்னை: வணிகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியதற்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
பழனிசாமி: தற்போது வணிக நிறுவனங்களும், சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகளும் தொடர்ந்து தொழில் செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வரும் இந்தச் சூழ்நிலையில், மீண்டும் அவர்களுக்கு 2-ம் முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.
மின்வாரியம் என்பது ஒரு சேவைத் துறை. குடிசைகளில் வசிக்கும் மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், விவசாயிகளுக்கும், நெசவாளர்களுக்கும் இலவசமாகவும், மானிய விலையிலும் மின்சாரம் வழங்க வேண்டும். அதேபோல், வணிக நிறுவனங்களுக்கும், அவர்களது தொழில் பாதிக்காத அளவுக்கு மின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
எனவே, மத்திய அரசையும், அண்டை மாநிலங்களையும் துணைக்கு அழைப்பதை நிறுத்திக்கொண்டு, வாக்களித்த மக்களுக்கு மேலும் மேலும் கட்டணச் சுமையைஏற்றி துரோகம் செய்ய வேண்டாம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 9 மாதங்களுக்கு முன்பு வீடு, வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு மின் கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு,தற்போது வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயரும் என திமுக அரசு அறிவித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது’’ என குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT