Published : 10 Jun 2023 06:20 AM
Last Updated : 10 Jun 2023 06:20 AM
தஞ்சாவூர்/திருச்சி: தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
நடப்பாண்டு காவிரிப் பாசனம் நடைபெறும் 12 மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்காக தமிழக அரசு ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. கடந்த ஏப்ரல் 27-ம் தேதி தூர்வாரும் பணிகள் தொடங்கின. மேட்டூர் அணையிலிருந்து வரும் 12-ம் தேதி பாசனத்துக்காக தண்ணீர்திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர் வந்தார். அங்குள்ள சுற்றுலா மாளிகையில் தங்கிய முதல்வர், நீர்வள ஆதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, ஆலக்குடியில் முதலைமுத்து வாரியில் ரூ.20 லட்சத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார். மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட முதல்வர், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர், பூதலூர் விண்ணமங்கலத்தில் முள்ளம்பள்ளம் வாய்க்கால் மற்றும் ‘சி’ பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டார் தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் வழியில் ஆங்காங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்களிடம், கோரிக்கை மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டார்.
திருச்சி மாவட்டத்தில்....: பின்னர், பூண்டி வழியாக திருச்சிமாவட்டம் திருமங்கலம் கிராமம் சென்ற முதல்வர் ஸ்டாலின், கூழையாற்றில் ரூ.1.94 கோடியில் 7.79 கி.மீ. தொலைவுக்கும், இருதயபுரம் நந்தியாற்றில் ரூ.1.94 கோடியில் 5.90 கி.மீ. தொலைவுக்கும் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.
வழியில், ஆலங்குடி மகாஜனம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்கால்வாய்களைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் பேசிய முதல்வரிடம், மாணவ, மாணவிகள் பள்ளிக்குச்சென்றுவர ஏதுவாக பேருந்துவசதியை அதிகப்படுத்த வேண்டும்என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அறிவுறுத்தினார்.
ஆய்வுகளின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ், எம்.பி. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT