Last Updated : 10 Jun, 2023 06:06 AM

 

Published : 10 Jun 2023 06:06 AM
Last Updated : 10 Jun 2023 06:06 AM

கோவை | தமிழர் மரபை பறைசாற்றும் குறிச்சி குளம்

கோவை: கோவை குறிச்சி குளத்தின் கரையில், தமிழ் எழுத்துக்களால் செய்யப்பட்ட 25 அடி உயர பிரமாண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், உக்கடம் பெரியகுளம், சுங்கம் வாலாங்குளம், செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம், செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம் ஆகிய 9 குளங்கள் உள்ளன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ், இந்தக் குளங்களின் கரைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

ரூ.62.17 கோடி மதிப்பில் உக்கடம் பெரியகுளம், ரூ.67.86 கோடி மதிப்பில் வாலாங்குளம், ரூ.31.25 கோடி மதிப்பில் செல்வாம்பதி மற்றும் குமாரசாமி குளம், ரூ.19.36 கோடி மதிப்பில் கிருஷ்ணாம்பதி குளம், ரூ.52.16 கோடி மதிப்பில் குறிச்சி குளம் ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி பகுதியில் 2 பிரிவாக 340 ஏக்கர் பரப்பளவில் குறிச்சி குளம் அமைந்துள்ளது. இங்கு 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. தினமும் ஏராளமானோர் குளக்கரையில் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குளத்தின் பல்வேறு இடங்களில் தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: குறிச்சி குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் திறந்தவெளி அரங்கம் போல ‘செல்ஃபி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரத நாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

ஃபைபர் மெட்டீரியலால் இச்சிலைகள் செய்யப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாரம்பரியத்தை உணர்த்துகின்றன. இவை ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 15 அடி உயரத்தில் அமைகின்றன.

சாலையின் மறுபுறத்தில் உள்ள சின்னக்குளத்தில் நீர்வரத்து இல்லை. இதனால் அந்தக் குளத்தின் நடுவில் 25 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

கோவை குறிச்சி சின்ன குளத்தில் தமிழ் எழுத்துகளால்
அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை.

மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில், துருப்பிடிக்காத வகையில் ஸ்டீலால் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப் பட்டுள்ளது.

திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துக் களால் சிலை வைப்பது நாட்டிலேயே இது தான் முதல் முறை. இதில் சில சொற்கள் மறைத்து பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் இச்சிலையை உற்று நோக்கும்போது, அந்த 4 சொற்களும் தெரியவரும். இச்சிலை செய்ய 6 மாத காலம் ஆனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மாநகராட்சி ஆணை யர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘குறிச்சி குளத்தின் கரைப்பகுதியில் தமிழர்மரபை பறைசாற்றும் வகையில் திருவள்ளுவர் சிலை உட்பட 5 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் அவை முடிக்கப்பட்டு, மக்களின் பார்வைக்காக திறக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x