Published : 10 Jun 2023 06:11 AM
Last Updated : 10 Jun 2023 06:11 AM
இந்த பகுதிகளில் இருந்து தினமும்பல்லாயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணி காரணமாக சென்னைக்கு, தாம்பரம்-வேளச்சேரி சாலை வழியாக வந்து செல்கின்றனர். இதனால் இந்த சாலை வழியாக சென்னை பாரிமுனை, உயர் நீதிமன்றம், தியாகராய நகர்,சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து, தாம்பரத்துக்கு (கிழக்கு), ஏராளமான மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், மோட்டார் சைக்கிள், கார், சரக்கு வாகனங்கள் என இந்த சாலை எப்போதும் நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ளபெரும்பாலான கல்லூரிகள் மற்றும் ஐ.டி. நிறுவனங்களுக்குசெல்லும் தனியார் பேருந்துகளும் இந்தசாலை வழியாகவே சென்று வருகின்றன.
ஒரு வழிப்பாதையாக இருந்த இந்தசாலை, 1992-ம் ஆண்டு, 4 வழிப்பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. ஒரு சில இடங்களில் மட்டும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. நில எடுப்பு காரணமாக பல இடங்களில் விரிவாக்க பணிகள் நடைபெறவில்லை. பிறகு படிப்படியாக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில், கிழக்கு தாம்பரம், கவுரிவாக்கம் உள்ளிட்ட சிலஇடங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை. கிழக்கு தாம்பரம் ரயில்வே மேம்பாலம் முதல், ஐ.ஏ.எப்.சாலை சந்திப்பு வரை, ஆறு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அதன்பிறகு சாலைவிரிவாக்கப் பணிகள் நடைபெறவில்லை.
இதில் குறிப்பாக, கிழக்கு தாம்பரத்தில், 300 மீட்டர் மட்டும் அகலப்படுத்தாமல் இரு வழிப்பாதையாகவே இருந்து வருகிறது. வருவாய்த் துறையினர் நிலஎடுப்பு பணியை சரிவர செய்யாததால், சுமார் கடந்த, 15 ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யப்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. குறிப்பாக இந்த குறுகிய பகுதியில் நெரிசல் ஏற்பட்டால் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இது குறித்து கவுன்சிலர் சகிஷா ஜான்சி மேரி கூறியதாவது: 300 மீட்டர் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிலஉரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை கொடுத்தால் மட்டுமே நிலத்தை கையகப்படுத்த முடியும். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்கம் செய்ய முடியாமல்உள்ளது. மேலும், இழப்பீட்டு தொகை வழங்கி நிலத்தை பெறவேண்டிய நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் மட்டுமே மழைநீர் கால்வாய் அமைக்க முடியும். விரிவாக்க பணிமுழுமை ௮டையாததால் ௮டிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்து, பாதாள சாக்கடை பணிகள் பாதிப்பு, மழைநீர் கால்வாய் பணிகள் பாதிப்புஎன வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால் தாம்பரம்-வேளச்சேரி சாலை விரிவாக்கப் பணிகளை விரைவாக செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து தாம்பரம் நெடுஞ்சாலைதுறையினர் கூறியதாவது: சாலைஅகலப்படுத்த வேண்டி நில எடுப்புசெய்யப்பட்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகைரூ.12 கோடி வழங்குவதற்காக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டநிர்வாகம் அறிக்கை சமர்ப்பித்து விரைவாக நிதி பெற்றுக் கொடுத்தால், நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு சாலை அகலப்படுத்தும் பணி தொடங்கும். சாலை அமைக்க தயாராகஇருக்கிறோம். ஆனால், வருவாய்த் துறையினர் நில எடுப்பு பணியை காலதாமதம் செய்வதால் நெடுஞ்சாலை துறை மீது மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுகிறது என்கின்றனர்.
நில எடுப்பு வருவாய்த் துறையினர்தரப்பில் கூறியதாவது: நெடுஞ்சாலை துறையினர் நிலம் எடுக்க வேண்டியஅளவினை அடிக்கடி மாற்றி வழங்கியதாலும், நில உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்றதாலும் நில எடுப்பு பணிகாலதாமதமானது. தற்போது நில எடுப்பு பணி அனைத்தும் முடிந்து விட்டது. உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT