Last Updated : 10 Jun, 2023 06:45 AM

 

Published : 10 Jun 2023 06:45 AM
Last Updated : 10 Jun 2023 06:45 AM

வில்லியனூரில் ஆயுஷ் மருத்துவமனை 3 மாதங்களுக்குள் திறக்க பணிகள் மும்முரம்: 4 ஆண்டுகளாக நடந்த கட்டுமான பணி நிறைவு

மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என 65 பேருக்காக புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: கடந்த 4 ஆண்டுகளாக நடந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் 3 மாதங்களுக்குள் புதுச்சேரி வில்லியனூரில் ஆயுஷ் மருத்துவமனையை திறக்க பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இம்மருத்துவமனைக்கான பணியிடங்களை நிரப்ப விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ள சூழலில், தேவையான மருத்துவ சாதனங்கள் வாங்கவும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மத்திய ஆயுஷ் அமைச்சகம் பொதுமக்களின் வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல், உணவு மேலாண்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்துடன் கூடிய சமூக கட்டமைப்பை உருவாக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இதன் ஒரு முக்கிய அங்கமாக சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, யோகா ஆகியவற்றை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் ஆயுஷ் மருத்துவமனைகளை உருவாக்கி வருகிறது.

அதன் ஒரு அங்கமாக புதுச்சேரி வில்லியனூரில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் ஆயுஷ் மருத்துவமனை கட்டுவதற்கு, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 2019-ம் ஆண்டு, அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் அப்போதைய முதல்வர் நாராயணசாமி அடிக்கல் நாட்டினார்.

பொதுப்பணித்துறை சார்பில், 4 ஆயிரம் சதுர அடியில் தரை தளம், 3 மாடி கட்டிடங்களுடன் 2 ஆண்டுகளில் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது. கரோனா தொற்று, அதைத் தொடர்ந்த ஊரடங்கால் கட்டுமானப்பணிகள் விரைவாக நடக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசு பொறுப்பு ஏற்றவுடன், பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன.

சுகாதாரத் துறையில் உள்ள இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் தரன் தலைமையிலான அதிகாரிகள் இந்த மருத்துவமனையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வட்டாரங்களில் கேட்டதற்கு, "இந்த ஆயுஷ் மருத்துவமனையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் பிரிவுகள் இயங்கும்.

ஆயுஷ் மருத்துவமனையின் முதல் தளத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத பிரிவில் ஆண் மற்றும் பெண்களுக்கு தலா 10 படுக்கை அறைகள், மருந்தகம், ஆய்வக வசதி அமைகிறது.

இரண்டாவது தளத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் 15 படுக்கை அறைகளும், மூன்றாவது தளத்தில் கருத்தரங்க கூடம், அலுவலகம், மருத்துவ அதிகாரி அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. போதிய நிதி கொடுக்கப்பட்டுள்ளதால் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு தேவையான சாதனங்கள் வாங்கும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயுஷ் மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என 65 பேருக்காக புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மொத்தமாக 50 படுக்கைகளுடன் இந்த மருத்துவமனை தொடங்கும்.

இந்த மருத்துவமனையில் யோகா கூடம் உண்டு. ஆயுர்வேதாவில் பஞ்சகர்மா சிகிச்சை, சித்தாவில் வர்மம், தொக்கனம் சிகிச்சைக்கும் சிறப்பு மருத்துவர்கள் நியமி்க்கப்படுவர். மூன்று மாதங்களுக்குள் ஆயுஷ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அடுத்த கட்டமாக காரைக்காலில் 30 ஆயிரம் சதுர அடியில், ரூ. 15 கோடி மதிப்பீட்டில் ஆயுஷ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கு முதற்கட்டமாக அரசு ரூ. 2 கோடி ஒதுக்குவதாக தெரிவித்துள்ளது" என்று தெரிவித்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் என 65 பேருக்காக புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x