Last Updated : 10 Jun, 2023 06:53 AM

 

Published : 10 Jun 2023 06:53 AM
Last Updated : 10 Jun 2023 06:53 AM

ஒரத்தநாட்டில் ஜூன் 12-ல் அமமுக பொதுக்கூட்டம்: வைத்திலிங்கத்துக்காக களமிறங்கும் தினகரன்

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன், வைத்திலிங்கம்

தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் வரும் 12-ம் தேதி அமமுக சார்பில் திமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் கூட்டம் திமுக அரசைக் கண்டித்து நடைபெறுவதாக கூறப்பட்டாலும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டத்தில் வசைபாடிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடக்க உள்ளதாகவே அமமுகவினரும், ஓபிஎஸ் ஆதரவாளர்களும் கருதுகின்றனர்.

ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் டெல்டா மாவட்டங்களில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கியவர் ஆர்.வைத்திலிங்கம். கட்சிக்காரர்களின் புகார்கள், கோரிக்கைகள் ஆகியவற்றைப் பரிசீலித்து, நடவடிக்கை எடுப்பதற்காக அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட ஐவர் அணியில் இடம் பெற்றிருந்தார்.

ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களைத் தொடர்ந்து, டிடிவி.தினகரன் தலைமையில் அமமுக உருவானது. டெல்டா பகுதியில் வைத்திலிங்கத்தை பிடிக்காத பலரும், அமமுகவில் இணைந்தனர். இதனிடையே, அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டபோது, ஓ.பன்னீர்செல்வம் பக்கம் முழுமையாக நின்றவர் வைத்திலிங்கம்.

ஓ.பன்னீர்செல்வம் பேசுவதை காட்டிலும் வைத்திலிங்கமே பல்வேறு நேரங்களில் அதிரடியாக பேசி வருகிறார். மேலும், ஒரத்தநாடு பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் சசிகலாவை வைத்திலிங்கம் சந்தித்துப் பேசியது, சென்னையில் டிடிவி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசியது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து, இவர்கள் ஒரு அணியில் திரள வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 7-ம் தேதி தஞ்சாவூரில் வைத்திலிங்கத்தின் மகன் திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வமும், டிடிவி.தினகரனும் பங்கேற்று இணைந்து செயல்படப் போவதாக கூறியது அமமுக- ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, தமிழக அரசின் விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து கடந்த மே 15-ம் தேதி ஒரத்தநாட்டில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது, தமிழக அரசை கண்டித்து பேசுவதை காட்டிலும், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை கண்டித்து பேசியது தான் அதிகம். அதிலும், வைத்திலிங்கம் இந்த பகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், திமுக அரசை கண்டித்து அமமுக சார்பில் ஜூன் 12-ம் தேதி டிடிவி.தினகரன் தலைமையில் ஒரத்தநாட்டில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இது திமுக அரசைக் கண்டித்து நடைபெறும் பொதுக் கூட்டம் என அறிவித்தாலும், எந்த இடத்தில் வைத்திலிங்கத்தை, பழனிசாமி வசைபாடிவிட்டு சென்றாரோ, அதே இடத்தில் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக அமமுகவினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் கருதுகின்றனர்.

மேலும், அமமுக சார்பில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை அமமுகவினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருவது, தஞ்சாவூர் மாவட்ட அரசியல் களத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x