Published : 10 Oct 2017 04:47 PM
Last Updated : 10 Oct 2017 04:47 PM

20 ஆண்டுகளாக பிரபலங்களுக்கு தமிழில் கடிதம் எழுதும் தொழிலாளி

இன்று உலக அஞ்சல் தினம்

திருச்சியைச் சேர்ந்த நகைப்பட்டறை தொழிலாளி மணி(46), ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள இவருக்கு தமிழில் கடிதம் எழுவது என்றால் அலாதி பிரியம். பள்ளியில் படிக்கும்போதே நண்பர்கள், உறவினர்களுக்கு அஞ்சலில் வாழ்த்து அட்டை அனுப்பியவர், இன்றுவரை அப்பழக்கத்தைத் தொடர்கிறார்.

இதுதவிர, கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சாதனை படைத்த முக்கிய பிரமுகர்களுக்கு தமிழில் கடிதம் எழுதி அனுப்பிவருகிறார்.

பிரபலங்களின் கடிதங்கள்

இ-மெயில், எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் உள்ளிட்ட டிஜிட்டல் தகவல் பரிமாற்றம் ஆக்கிரமித்துள்ள இக்காலத்திலும், அருகில் உள்ள அஞ்சல் நிலையத்துக்குச் சென்று கடிதம் வாங்கி, தனது கைப்பட தமிழில் எழுதி அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள் ளார்.

இதுகுறித்து, ‘தி இந்து’விடம் மணி கூறியதாவது:

அமெரிக்க அதிபர், இங்கிலாந்து, கனடா நாட்டு பிரதமர்கள், போப் 16-ம் பெனடிக்ட், இந்திய பிரதமர்கள், ஜனாதிபதிகள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் பதவியில் இருக்கும்போதே கடிதம் எழுதி பதில் பெற்றுள்ளேன். அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும் தாய் மொழியான தமிழில்தான் கடிதம் எழுதுவேன். நான் கடிதம் அனுப்பும் முக்கிய பிரமுகர்களிடம் கண்டிப்பாக மொழி பெயர்ப்பாளர் இருப்பார்கள். என் கடிதத்துக்கு பெரும்பாலும் ஒரு மாதத்துக்குள் பதில் வந்துவிடும். அப்படி வராவிட்டால், மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்புவேன். அயல் நாடுகளைச் சேர்ந்தவர்களும், வட மாநிலத்தவரும் உடனே பதில் அனுப்புவர்.

10 நாட்களில் பதில் கடிதம்

தமிழகத்திலும் பல தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதம் எழுதிய 10 நாட்களுக்குள் பதில் கடிதம் அனுப்பியவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மட்டும்தான்.

எந்த ஒரு கடிதமும் அவரவர் தாய் மொழியில் கைப்பட எழுதும்போது கிடைக்கும் உணர்வுக்கு இணை வேறெதுவும் இல்லை.

நான் சேகரித்த கடிதங்களை விரைவில் அரசு நூலகம் அல்லது காட்சியகத்துக்கு கொடுக்க உள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x