Last Updated : 01 Oct, 2017 10:16 AM

1  

Published : 01 Oct 2017 10:16 AM
Last Updated : 01 Oct 2017 10:16 AM

மானியத்துடன் கட்டித்தரும் தனிநபர் கழிப்பறை: திட்டம் நிறைவேறினால் போதுமா? நோக்கம் நிறைவேற வேண்டாமா?

மானியத்துடன் கழிப்பறை கட்டித்தரும் திட்டம் நடைமுறைச் சிக்கல்களால் பின்னடைவைச் சந்தித் துள்ளது.

சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1999-ம் ஆண்டு மத்திய அரசு ‘நிர்மல் பாரத் அபியான்’ என்ற திட்டத்தை உருவாக்கியது. இத்திட்டத்தின்கீழ் கழிப்பறைகள் கட்டுவது குறித்தும், கழிப்பறையின் அவசியம் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், திறந்தவெளி மலம் கழிப்பு இல்லாத கிராமங்களுக்கு மத்திய அரசின் ‘நிர்மல் புரஸ்கார்’ விருதை வழங்கி கவுரவித்து வருகிறது.

‘நிர்மல் பாரத் அபியான்’ திட்டத்தின்படி,ஒவ்வொருவரும் தங்களது இல்லத்தில் தனிநபர் கழிப்பிடம் அமைத்துக் கொள்ள ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்து பெயர்கூற விரும்பாத ஊராட்சி செயலர் கூறும்போது, “ஒரு வீட்டுக்கு கழிப்பறை கட்ட ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. பயனாளிகள் இந்த 12 ஆயிரத்திலேயே கழிப்பறை கட்ட வேண்டும் என்கின்றனர்.

கொத்தனார் கூலி, செங்கல் அல்லது அடர் சாம்பல் கல் (Solid Block), சிமெண்ட் விலை, மணல் விலை, கான்கிரீட் தொட்டி, அதற்கான மூடி, பீங்கான் கழிப்பறை குழம்பு (Toilet Basin), மேற்கூரை உள்ளிட்டவை சேர்த்து ரூ.15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை செலவாகிறது. இதில் பயனாளி 10 பைசாகூட செலவு செய்ய மறுப்பதோடு, உடலுழைப்பையும் அளிப்பதில்லை. மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர்களோ எப்படியாவது கட்டி முடியுங்கள், இலக்கை அடைய வேண்டும் என எங்களை நிர்பந்தப்படுத்துகின்றனர்.

மேலும், பீங்கான் கழிப்பறை தான் வைக்க வேண்டும்; கதவுகளை அவர்கள் சொல்கிற இடத்தில்தான் வாங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கட்டாயப்படுத்துகின்றனர். பயனாளிகள் அதை ஏற்க மறுக்கின்றனர், சில பயனாளிகள் மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் அவர்கள் மேற்கத்திய கழிப்பறை வேண்டும் என்கின்றனர். அதிகாரிகள் அதை ஏற்க மறுக்கின்றனர்.

இதுபோன்ற பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ள நிலையில், இத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றுவது? அனைவருக்கும் கழிப்பறை கட்டிக் கொடுத்துவிட்டோம் என்று செலவுகளைக் காண்பிக்க முடியுமே தவிர, பயனாளிகளுக்கு அவை பயன்படுகிறதா என்று பார்க்க முடியாது’’ என்றார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் முத்தாண்டிக்குப்பத்தைச் சேர்ந்த பயனாளி செல்வராஜ் கூறும்போது, “மானியத்துடன் கூடிய இத்திட்டத்தை வரவேற்கிறோம். கழிப்பறை கட்டிவிட்டால் போதுமா? தேவையான தண்ணீர் வசதியில்லை. அவர்கள் அவசர கதியில் கட்டிக் கொடுப்பதால் சில மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. எனவே மானியத் தொகையை உயர்த்தி, பயனாளியே கட்டிக் கொள்ளும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும்’’ என்றார்.

இதுதொடர்பாக ‘நிர்மல் பாரத் அபியான்’ திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசனிடம் கேட்டபோது, “நோக்கத்தின் அடிப்படையில் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. பயனாளிகள் தரமான முறையில் அவர்களே கழிப்பறைக் கட்டிக் கொண்டால், அதற்குரிய மானியத் தொகையை முழுவதுமாக கொடுத்து விடுவோம். மற்றபடி கழிப்பறைக்குத் தேவையான உபகரணங்கள் வாங்க நிர்பந்தப்படுத்துவது தரத்துக்காகவே. ஒரே இடத்தில் வாங்கும்போது, அவற்றின் விலை குறையும் என்பதாலேயே’’ என்று கூறுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x