Published : 10 Jun 2023 12:44 AM
Last Updated : 10 Jun 2023 12:44 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த சூழலில், மாநில காங்கிரஸ் தலைவர் மாற்றம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத் தலைவராக எம்பி வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மக்களவைத் தேர்தலை முன்வைத்து கட்சித் தலைமை இம்முடிவு எடுத்துள்ளது.
புதுச்சேரி காங்கிரஸில் இருந்து பல கட்சிகள் உதயமாகியுள்ளன. குறிப்பாக காங்கிரஸில் முக்கியத் தலைவர்களாக இருந்த கண்ணன், ரங்கசாமி ஆகியோர் தனிக்கட்சி தொடங்கினாலும் பலர் கட்சியை விட்டு வெளியேறினாலும் காங்கிரஸ் தொடர்ந்து பலத்தை நிரூபித்து வந்துள்ளது.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அப்போதைய முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே கடும் மோதல் நிலவியது. இதனால் கடும் நெருக்கடி ஏற்பட்டது.
அந்த அசாதாரண சூழலுக்கு நடுவில் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியானது, அப்போதைய அமைச்சர் நமச்சிவாயத்திடம் இருந்து ஏ.வி.சுப்பிரமணியத்திடம் தரப்பட்டது. அதைத்தொடர்ந்து முதல்வர் நாராயணசாமி மீது அதிருப்தி தெரிவித்து, அப்போது அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம் உள்ளிட்டோர் பாஜகவிலும், அமைச்சராக இருந்த மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் என்ஆர் காங்கிரஸிலும் இணைந்தனர்.
இதனால் 5 ஆண்டுகள் பூர்த்தியாகாமலேயே காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி பாஜகவில் இணைந்தனர். 2021 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமி போட்டியிடவில்லை. முக்கியமாக ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரையே நிறுத்த முடியாமல் சுயேச்சைக்கு ஆதரவளித்தது. இறுதியில் இரு தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் இத்தேர்தலில் வென்றது. படுதோல்வியால் காங்கிரஸ் கட்சி புதுவையில் மேலும் கரையத் தொடங்கியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ஏ.வி. சுப்பிரமணியன் கட்சித் தலைமையிடம் தெரிவித்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிடம் முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், அரசு கொறடா அனந்தராமன், மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மாநிலத் தலைமை பதவிக்கு விருப்பம் தெரிவித்தனர். அதில் பலர் மாநிலத் தலைவர் பதவியை பெற கடுமையாக முயற்சித்தனர்.
ஆனால் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து இரு ஆண்டுகளாகியும் மாநிலத் தலைவர் மாற்றத்தை காங்கிரஸ் செய்யவில்லை. இச்சூழலில் கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்றுள்ளதை அடுத்தும் மக்களவைத் தேர்தல் வரவுள்ளதை அடுத்தும், மாநிலத் தலைவரை நியமிக்கும் முடிவை காங்கிரஸ் தலைமை தற்போது எடுத்துள்ளது.
அதன்படி காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நேற்று வெளியிட்ட பத்திரிக்கைக்குறிப்பில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக எம்பி வைத்திலிங்கத்தை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, "கட்சித்தரப்பில் பலரும் மாநிலத் தலைவர் பதவிக்கு விருப்பம் தெரிவித்து போட்டி ஏற்பட்டது. அதில் கட்சித் தலைமை கருத்து கேட்டதில் பெரும்பாலானோர் மாநிலத் தலைவராக வைத்திலிங்கத்தை நியமிக்க விருப்பம் தெரிிவித்ததால் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அகில இந்திய அளவில் பொறுப்புகளை பெற முயற்சிக்கிறார்" என்று குறிப்பிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT